Published : 09 Mar 2015 10:01 AM
Last Updated : 09 Mar 2015 10:01 AM

பொதுத் துறையில் பெண்கள் சாதிக்க வாய்ப்புகள் அதிகம்: பொருளாதாரத்துறை நிபுணர்கள் கருத்து

பொதுத் துறையில் பெண்கள் சாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆனால், அவை பெண்களை ஈர்ப்பதில் தவறுகின்றன என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு சென்னையில் நேற்று சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் வங்கித் துறை நிபுணர்கள், பட்டயக் கணக்காளர்கள் பலர்

கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.கோட்டீஸ்வரன் கூறும்போது, “பொதுத் துறையில்தான் கடை நிலை ஊழியராக இருக்கும் ஒருவர் நிறுவனத்தின் தலைவர் பதவி வரை வளர முடியும். பொதுத் துறையில் குறிப்பாக வங்கித் துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இடர் மேலாண்மை பணிகளில் பெண்கள் அதிகம் ஈடுபடலாம். அவர்களுக்கான பாதுகாப்பும் பொதுத் துறையில்தான் உறுதிப்படுத்தப்படும். ஆனால், பொதுத் துறை நிறுவனங்கள் பெண்களை ஈர்ப்பதில் தவறுகின்றன” என்றார்.

தமிழ்நாடு நகர்ப்புற மேம் பாட்டுத்துறை இயக்குநர் கிர்லோஷ்குமார் பேசும்போது, “அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 4,500 விவசாய கூட்டுறவு சங்கங்கள், 130 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றை தணிக்கை செய்யும் பணிகளில் பெண்கள் அதிகமாக ஈடுபட வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பின் திட்டக் குழு தலைவர் வி.முரளி, “தென்னிந்தியாவில் உள்ள 47ஆயிரத்து 252 பட்டய கணக்காளர்களில் 9 ஆயிரத்து 297 பேர் பெண்கள். புதிய நிறுவனங்கள் சட்டத்தின்படி ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண் இயக்குநர்கள் இருக்க வேண்டும் என்று கூறியிருப்பது புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்” என்றார்.

ஸ்ரீராம் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் சுபஸ்ரீ ஸ்ரீராம் கூறும்போது, “பெண்களிடம் உயரிய பொறுப்புகளை ஆண்கள் நம்பி கொடுக்க வேண்டும். பெண்கள் தங்களின் சுய முக்கியத்துவத்தை உணர்ந்து கார்ப்பரேட் உலகில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x