Published : 24 Mar 2015 10:18 PM
Last Updated : 24 Mar 2015 10:18 PM

உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

உதவித் தொகை உயர்வு, அடையாளச் சான்று, வேலையில் 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தை சென்னையில் இன்று தொடங்கினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரும் வரை இரவும் பகலும் அந்த இடத்திலேயே காத்திருக்கப் போவதாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் சுமார் 3.5 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே உதவித் தொகை கிடைக்கிறது. உதவித்தொகை வழங்குவதில் அரசின் விதிகள் கடுமையாக இருக்கின்றன. மாற்றுத் திறனாளியின் குடும்ப சொத்து ரூ.5 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது, குடும்பத்தில் 18 வயது நிரம்பிய ஆண்கள் இருக்கக் கூடாது, காது கேளாதவர்களுக்கு 80 சதவீத ஊனம் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு 60 சதவீத ஊனம் இருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரும்பாலான இடங்களில் அமல்படுத்தப்படுவதில்லை.இவ்வாறு நம்புராஜன் கூறினார்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘‘மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்றார்.

மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் உ.வாசுகி, காது கேளாதோர் சங்கத் தலைவர் இ.கே.ஜமால் ஆலி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர்கள் டி.லட்சுமணன், கே.ஆர்.சக்கரவர்த்தி, இணைச் செயலாளர்கள் டி.ஏழுமலை, பி.ஜீவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x