Published : 02 Feb 2014 09:49 PM
Last Updated : 02 Feb 2014 09:49 PM

தனித்துப் போட்டியிடவே தேமுதிகவினர் விருப்பம்: விஜயகாந்த்

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே தேமுதிக தொண்டர்கள் விரும்புவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக மாநாட்டில் தொண்டர்களிடம் கருத்து கேட்டு, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று கூறிவந்த நிலையில், விஜயகாந்த் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேவேளையில், கூட்டணி விஷயத்தில் கட்சித் தலைமையின் முடிவை தொண்டர்கள் ஏற்பார்கள் என்று கூறியிருப்பது, மக்களவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி தொடர்பான ஊகங்களை நீட்டித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக சார்பில் 'ஊழல் எதிர்ப்பு மாநாடு' நடைபெற்றது.

மாநாட்டில் விஜயகாந்த் பேசியது:

"என் மனைவி சொன்னதைத்தான் சொல்கிறேன். விழுப்புரத்தில் கடலே இல்லை என்று நினைத்தேன். இங்கும் கடல் இருக்கிறது. மக்கள் கடல்.

இங்கு வந்திருக்கும் தொண்டர்கள் அனைவரும் இளைஞர்கள். கூட்டத்தில் யாருக்கும் முடி நரைக்கவில்லை. விவேகானந்தர் நூறு இளைஞர்கள் கேட்டார். இங்கே லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள்.

தற்போது காவல் துறையின் நிலையைக் கண்டு, இதுவரை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன். இனி, அது நிகழாது. போலீஸ் வேடத்தில் இனி நடிக்க மாட்டேன். என் மகனையும் நடிக்கவிட மாட்டேன்.

இந்தியா முழுவதும் ஊழல் நிறைந்திருக்கிறது. அரசு இலவசங்களை வழங்குகிறது. ஆனால், அவற்றை வினியோகிப்பதில் லஞ்சம் மிகுதியாக இருக்கிறது.

கோமாரி நோய் பெரிய பிரச்சினையாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதா கோமாரி நோயைக் கண்டுகொள்ளவிலை.

சில பத்திரிகைகள் எழுதும் செய்திகளை நான் படிப்பதில்லை. விஜய்காந்துக்கு முன்பாக தொண்டர்கள் சண்டை போடுவதாக பத்திரிகைகள் தவறாக எழுதுகின்றன.

இளைஞர்களைக் கெடுப்பதற்காகவே அரசு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளை திறந்து வைத்திருக்கிறது. ஆட்சியாளர்களிடம் மக்கள் ஏமாறக்கூடாது. டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு வைக்கின்றனர். ரூ.200 கோடி முதல் 300 கோடி என்று இலக்கு வைக்கப்படுகிறது. விவசாயத்துக்கும் இலக்கு வைக்க வேண்டியதுதானே.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, விதி எண் 110-ன் கீழ் அறிக்கை வாசித்தால், அதை எதிர்த்துப் பேசக் கூடாது என்பதால், அதையே கடைப்பிடிக்கிறார்.

இலவசமாக தண்ணீர் தர வேண்டிய முதல்வரே, தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கிறார். மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

கூடங்குளம் மக்களை மாநில அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?

விழுப்புரம் விவசாய பூமி. அதை தொழில்துறையாக மாற்ற முயற்சி நடக்கிறது. பால் விலையை ஏன் ஏற்றினீர்கள் என்று ஜெயலலிதாவிடம் கேட்டேன். இடைத்தேர்தலில் வெற்றிபெற திராணி இருக்கிறதா என்று கேட்டார். திமுக ஆட்சியின்போது 13 இடைத்தேர்தல்களிலும் திமுகவினர் ஜெயித்தனரே? அப்போது உங்களுக்கு திராணி எங்கே போனது?

ஜாதி, மதம் வைத்து கட்சி நடத்த முடியாது. இலங்கை தமிழர் கண்ணீரை வைத்து அரசியல் நடக்கிறது. அவர்களுக்கு என்ன செய்தீர்கள்.

டெல்லி செங்கோட்டைக்குச் சென்றாலும் சரி, சென்னை ஜார்ஜ் கோட்டைக்குச் சென்றாலும் சரி, இனி ஆளப்போவது தேமுதிகதான்.

தமிழகத்தில் மின்வெட்டு உள்ளிட்ட எத்தனையோ குறைகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியவில்லை. இவர் (ஜெயலலிதா) பிரதமராகி என்ன செய்யப் போகிறார்?

மின்வெட்டு பற்றி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் முதல்வரும் பொய் சொல்கின்றனர். குளிர் காலத்திலேயே மின்வெட்டால் பிரச்சினை உள்ளது. வெயில் காலத்தில் என்னவாகும்?

என் மனைவி சொன்னதுபோலவே எதிரிகளை மன்னித்தாலும் மன்னிப்பேன்; ஆனால், துரோகிகளை மன்னிக்க மாட்டேன்.

முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மாற்றி வருவதால், மக்களுக்குத்தான் பிரச்சினை.

நம் மாநிலத்தில் இப்போது சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உள்ளதைச் சொன்னால், அவதூறு வழக்கு போடுகிறார்கள்.

நாங்கள் ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம். தமிழகத்தில் 2016-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி" என்றார் விஜயகாந்த்

தனித்துப் போட்டி?

மக்களவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்குமா என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். ஏற்கெனவே முன்பு கூட்டணி வைத்துதான் அவமானபடுத்தப்பட்டோம். நல்ல பாடத்தையும் கற்றுக்கொண்டோம்.

பின்னர், கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டார். "கூட்டணி தேவையா... இல்லையா?" என்று அவர் கேட்டபோது, தொண்டர்கள் வேண்டாம் என்று கூறினர்.

இதையடுத்து, "என் தொண்டர்கள் தனித்துப் போட்டியிடவே விரும்புகின்றனர். ஆனாலும், தலைவர் வேறு முடிவு எடுத்தால், அதனைத் தொண்டர்கள் ஏற்பர்" என்றார் விஜயகாந்த்.

நாளைய முதல்வர்: சுதீஷ்

இளைஞரணி செயலாளர் சுதீஷ் பேசியதாவது: 2005-ல் கட்சி ஆரம்பித்தபோது அனைத்து அரசியல் கட்சிகளும் நம்மை கிண்டல் செய்தன. அன்று சட்டமன்ற உறுப்பினர், இன்று எதிர்கட்சித் தலைவர், நாளை முதல்வர்.

திமுக மாநாடு நடத்தினால் மேடையில் 50 சேர்கள் மட்டுமே இருக்கும். அதி்ல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மட்டும்தான் இருப்பர். மற்றொரு கட்சி மாநாடு நடத்தினால் ஒரே ஒரு சேர்தான் இருக்கும். மற்றவர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் மிகப்பெரும் மேடை அமைத்து கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அமர வைத்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு என்ற தலைப்பை வைக்க இந்தியாவிலேயே விஜயகாந்துக்கு மட்டும்தான் தகுதி உண்டு. இவ்வாறு சுதீஷ் பேசினார்.

பிரதமரை தீர்மானிப்போம்:

பிரேமலதா பிரேமலதா பேசியதாவது: கடாபி, முசோலினி, இடிஅமீன் போன்றவர்களை அந்நாட்டு மக்கள் ஊழலுக்காக தண்டித்துவிட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 17 ஆண்டுகளாக முடிவின்றி நடந்து வருகிறது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலம் ஊழல் கட்சியாக திமுக இருக்கிறது. லஞ்சம் ஊழல் இல்லாத கட்சியாக தேமுதிக திகழ்கிறது. மின்வெட்டு, தொழிலாளர் பிரச்சினை, செவிலியர், மீனவர்கள், நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் என தமிழகத்தில் அன்றாடம் போராட்டம் நடக்கிறது.

உத்தரகாண்ட்டில் வாக்குறுதியை நிறைவேற்றாததால் பகுகுணா முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார். ஜெயலலிதா அவ்வாறு செய்வாரா?

நாற்பதும் நமதே என்கிறார்கள். 4-ல் கூட அதிமுக வெற்றி பெறாது. எதிரிகளைக்கூட மன்னிப்போம். துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது.

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக தேமுதிக இருக்க வேண்டும் என்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பேச்சின்போது, தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் பல்வெறு விவகாரங்களில் கடுமையாக சாடினார்.

அதேவேளையில், திமுக குறித்து எதுவும் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு துரோகம் செய்ததால்தான், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டதாக, தேமுதிக மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். 2ஜி ஊழல் விவகாரத்தில் திமுகவை குற்றம்சாட்டி அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x