Published : 07 Mar 2015 04:50 PM
Last Updated : 07 Mar 2015 04:50 PM

உலக மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கலைஞர்: 19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணிநேர வேலை, வாக்களிக்கும் உரிமை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடினர். அப்போராட்டங்களின் ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்னும் மன்னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார்ச திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, உலக மகளிர் நாள். உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிலும், அதன் பின்னரும் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அதன் விளைவாகத்தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங் களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெருமைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

கழக அரசு காலத்தில் தொடங்கப்பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றித் தொடர்ந்திட - எங்கும் எதிலும் ஆண்களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய்திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ : மனிதகுலத்தின் உயர்வுக்கும் பெருமைக்கும் கருவறையாகத் திகழ்வது பெண்ணினம்தான். பெண்மையை, தாய்மையைத் தமிழர்கள் சங்க காலத்தில் போற்றி வாழ்ந்ததால்தான் அரசர்களுக்கே அறம் உரைக்கும் துணிச்சலோடு கவிதைகள் புனையும் பெண்பாற் புலவர்களும் வாழ்ந்தனர். ஆனால் உலக வரலாற்றின் நெடுகிலும் பெண்கள் ஆணாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, துன்பங்களைத் தாங்கியே வாழ்ந்து வந்துள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்துதான் அமெரிக்காவிலும், ஐரோப்பா கண்டத்திலும் பெண்கள் உரிமைப்போர் தொடுத்தனர். அரசியலில், சமூக இயலில் தொடர்ந்து போராடியே உரிமைகளைப் பெற்றனர். அரசுகளை இயக்கும் தலைமைப் பீடங்களையும் அலங்கரித்தனர். ஆனால், உரிமைகளுக்காகப் போராடிய பெண்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவலம் மிக மிகக் கொடூரமானது. அவர்களின் உயிருக்கும், கற்புக்கும், மானத்துக்கும், கண்ணியத்துக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது.

தமிழகத்தில் மகளிருக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல், கற்பழிப்பு, உயிர்க்கொலை ஆகிய அனைத்துக் கொடுமைகளுக்கும் மது அரக்கனே முழு முதல் காரணமாகத் திகழ்கிறது. சமுதாயத்தின் அனைத்து அங்கங்களையும் சீரழிக்கும் மதுக் கொடுமையை அகற்றாமல் மகளிர் உரிமை, மகளிர் மாண்பு பற்றி முழங்குவது வெறும் ஏமாற்று வேலை ஆகும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, என்றைக்கு மதுக்கொடுமை அகற்றப்படுகிறதோ, அந்த நாள்தான் மகளிர் திருநாளாக உண்மையில் மலரும்.

தமிழ் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும் நடுங்க வைக்கும் பாலியல் வன்முறைக்கும், கற்பழிப்புக் கொலைக்கும் ஆளானார்களே! அதனை நடத்திய கொடியோரைக் குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்கு அனைத்துலக மகளிர் சமுதாயம் உலக மகளிர் நாளில் சூளுரை மேற்கொள்ள வேண்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: பெண் இனம் அடைந்திருக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் என் பாராட்டுக்கள்; அடையப் போகும் வெற்றிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணை.

பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி அமையாது உலகு. பெண்மை வாழ்க! பெண் இனம் வாழ்க! - என்று இந்த உலக மகளிர் தின நன்னாளில் இல்லத்தரசிகளாகவும்; பல்வேறு துறைகளில் பணிபுரியும் உழைக்கும் மகளிராகவும்; எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தும் கனவுகளுடன் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவிகளாகவும்; இயன்றது அனைத்தையும் தம் குடும்பங்களுக்குத் தந்து, குடும்பத்தில் உள்ளோரின் உயர்விலும், மகிழ்ச்சியிலும் மன நிறைவு கொண்டு வாழும் தாய்மார்களாகவும் விளங்குகின்ற என் அன்புச் சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்: மகளிர் உரிமைகளுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் சிந்திக்க வேண்டிய, செயல்படவேண்டிய நாளாக உலக மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டைப்பொறுத்தவரை மக்கள் தொகையில் ஏறத்தாழ பெண்கள் 50 சதவீதமாக இருந்தாலும்,ஆட்சியிலும், அதிகாரத்திலும் 33 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கு கடந்த காலத்தில் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில்33 சதவீத இடஒதுக்கீடு கோரி கொண்டு வரப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்குமத்திய காங்கிரஸ் ஆட்சியையே பணயம் வைத்து, அன்னை சோனியா காந்தி எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேறியது. ஆனால் மக்களவையில் அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரிக்க முன்வரவில்லை.

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் அதிகரிக்கத் தொடங்கி, நிர்பயா படுகொலை செய்யப்படுகிற அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. நாட்டு மக்களின்கவனத்தை ஈர்த்த நிர்பயா படுகொலைக்குப் பிறகு இன்றைக்கு பெண்களின் பாதுகாப்பு அதிகமாக பேசப்பட்டாலும் தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. அதை முற்றிலும் தடுப்பதற்கு உலக மகளிர் தின விழாவில் சூளுரை மேற்கொள்வதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் உறுதி செய்ய முடியும். உலக மகளிர் தின விழாவில் அனைத்து பெண் சமுதாயத்தினருக்கும் வாழ்த்துகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x