Published : 25 Mar 2015 09:49 AM
Last Updated : 25 Mar 2015 09:49 AM

வங்கிக்கு வாடகைக்கு விடுவதாக பலரை ஏமாற்றி கார்கள் வெளி மாநிலங்களில் விற்பனை: பழைய குற்றவாளி உட்பட 2 பேர் கைது

வங்கிகளுக்கு வாடகைக்கு விடுவதாக கூறி பலரிடமும் கார்களை வாங்கி வெளி மாநிலங்களில் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 கார்கள் மீட்கப்பட்டன.

சென்னை மடுவங்கரையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் உட்பட 17 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி ஒரு புகார் கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:

‘அரசு வங்கிகளுக்கு பணம் விநியோகம் செய்ய வாகனங்கள் தேவை. விருப்பம் உள்ளவர்கள் நேரில் வரவும்’ என்று நாளிதழ்களில் விளம்பரங்கள் வந்தன. அதை பார்த்து அங்கு சென்றோம்.

அந்த முகவரியில் அம்மன் டிரேடர்ஸ் என்ற அலுவலகம் இருந்தது. அதை நடத்திவரும் கே.ராஜேஷ் (38), அவருடன் இருந்த முகமது மொய்தீன் ஆகியோர் எங்களிடம் பேசினர். ‘‘வங்கிகளுக்கு பணம் விநியோகம் செய்யப் பயன்படுத்தப்படும் கார்கள் என்பதால் அதில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும். எனவே, உங்களது கார்களை பிப்ரவரி 28-ம் தேதி இங்கு விட்டுச் செல்லுங்கள். மார்ச் 5-ம் தேதி வெள்ளை சீருடையில் பணிக்கு வந்துவிடுங்கள். அன்று முதல் உங்கள் கார்களை நீங்களே ஓட்டலாம். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை. மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்’’ என்றனர்.

அவர்கள் கூறியபடி, கார்களை பிப்ரவரி 28-ம் தேதி அந்த அலுவல கத்துக்கு ஓட்டிச் சென்று ராஜேஷிடம் ஒப்படைத்தோம். பணியில் சேரும் ஆர்வத்துடன் மார்ச் 5-ம் தேதி சென்றபோது, அலுவலகம் பூட்டப்பட் டிருந்தது. ராஜேஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எங்களை ஏமாற்றிவிட்டு தலைமறை வான அவர்களை கண்டுபிடித்து எங்களது கார்களை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோயம்பேடு உதவி ஆணையர் மோகன்ராஜ், மதுரவாயல் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோசடி செய்த ராஜேஷின் புகைப்படம் யாரிடமும் இல்லை. புகார் கொடுத்தவர்களில் ஒருவர் தனது காரை ஒப்படைத்தபோது, ராஜேஷ் அந்த காரை சுற்றிவந்து பார்த்திருக்கிறார். அப்போது எதேச்சையாக தனது செல்போனில் எடுத்த வீடியோவை போலீஸிடம் கொடுத்தார்.

பழைய குற்றவாளி

வீடியோ காட்சியைப் பார்த்த உதவி ஆணையர் மோகன்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். ராஜேஷ் என்ற பெயரில் இவர்களை ஏமாற்றியது பழைய குற்றவாளி ரமேஷ் என்பது தெரியவந்தது. டாஸ்மாக் மதுபாட்டில்களின் மூடியை போலியாக தயாரித்து, போலி மது வகைகளை விற்று பெரும்புதூரில் கைது செய்யப்பட்டவர் என்ற தகவலையும் தெரிவித்தார். பழைய குற்ற ஆவணங்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மணலி பெரிய சேக்காடு பகுதியில் பதுங்கியிருந்த ரமேஷை போலீஸார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளி தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த முகமது மொய்தீனும் கைது செய்யப்பட்டார்.

மோசடி செய்த கார்களை வெவ்வேறு இடங்களில் உள்ள குடோன்கள், பார்க்கிங் மையங்கள், தெரிந்தவர்களின் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். சில கார்களை வெளி மாநிலங்களில் விற்றுவிட்டதாகவும் கூறினர். அவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் 17 கார்களும் மீட்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x