Published : 13 Mar 2015 10:14 AM
Last Updated : 13 Mar 2015 10:14 AM
ரயில் பாதையோரமாக பொதுமக் கள் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விவகாரம் தொடர்பாக தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு முன்பு நேற்று ஆஜராயினர்.
சென்னையைச் சேர்ந்த எஸ்.பி.சுரேந்திரநாத் கார்த்திக், பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 60 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால், மாநகராட்சி சார்பில் 900 கழிவறைகள் மட்டுமே கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 500 மட்டுமே சரியாக இயங்கி வருகின்றன. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு போதுமான பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட வில்லை. பழைய வண்ணாரப் பேட்டை - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே பொதுமக் கள் ரயில் பாதையோரங்களில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதனால், சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, ரயில் பாதையோரம் இயற்கை உபாதைகளை கழிப்பதைத் தடுக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீது கடந்த மாதம் விசாரணை நடந்தபோது, ரயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர். கடந்த 10-ம் தேதி நடந்த விசாரணையின்போது அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அடுத்த விசாரணையின்போது ஆஜராகாவிட்டால், ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று அமர்வின் உறுப்பினர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தெற்கு ரயில்வே துணைப் பொது மேலாளர் மதிவாணன், சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் நக்கீரன், மாநகர சுகாதார அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் ஆஜராகி பதில் அளிக்க அவகாசம் கேட்டனர்.
இதைத் தொடர்ந்து, அடுத்த விசாரணையின்போது விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், விசாரணையை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT