Published : 04 Mar 2015 03:43 PM
Last Updated : 04 Mar 2015 03:43 PM

குவாரிகளில் பலியானவர்களின் விவரங்களை அளிக்க மருத்துவத் துறைக்கு சகாயம் உத்தரவு

கிரானைட் குவாரிகளில் பணியாற்றியபோது இறந்தவர்கள் விவரம் குறித்த அறிக்கையை மருத்துவத் துறையிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் குழுவினர் கேட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சகாயம் விசாரித்து வருகிறார். வரும் மார்ச் 15-ம் தேதி விசாரணைக் காலம் முடிவதால், அதற்குள் தாக்கல் செய்வதற்காக இடைக்கால அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வருமானவரி, மாசுக்கட்டுப்பாடு, வணிகவரி, துறைமுக பொறுப்புக்கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஏராளமான விவரங்கள் கேட்டு சகாயம் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த விவரங்களை பெரும்பாலான துறைகள் தாக்கல் செய்துவிட்டன. வழக்கு விவரங்கள் குறித்து போலீஸாரும், ஏற்றுமதி செய்யப்பட்ட கிரானைட் கற்கள் குறித்த விவரங்களை சென்னை துறைமுகக் கழகமும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

மேலும், கிரானைட் குவாரிகள் செயல்பட்டபோது நரபலி, கொலை என பல சம்பவங்கள் நடந்ததாகவும், சிலரைக் காணவில்லை என்றும் ஏராளமான புகார்கள் சகாயத்துக்கு வந்தன. குவாரிகளில் நடந்த விபத்து உள்ளிட்ட சம்பவம் தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யும்படி மேலூர் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இவற்றை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சேகரித்து வருகிறார். இதில் கிடைக்கும் தகவல்களை இடைக்கால அறிக்கையில் குறிப்பிட சகாயம் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சகாயம் கேட்ட விவரங்களை சேகரிக்க காவல்துறையில் தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி நியமித்துள்ளார். இந்த குழுவின் அறிக்கையும் இன்னும் சகாயத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. இடைக்கால அறிக்கை தயாரிப்பில் தீவிரம் காட்டிவரும் சகாயம் குழுவினர் காவல், மருத்துவத் துறை அறிக்கையை எதிர்பார்த்துள்ளது.

நேற்று சகாயம் குழுவை சேர்ந்த வேளாண் இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை, சகாயத்தின் தனி உதவியாளர் ஆல்பர்ட் ஆகியோர் கருப்புக்கால், சிவலிங்கம், புதுதாமரைப்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு குவாரிகளை ஆய்வு செய்து புகைப்படங்களை எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x