Published : 23 Apr 2014 09:35 AM
Last Updated : 23 Apr 2014 09:35 AM
சுமார் 17.2 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொழிலாளர்கள் நிறைந்தது கோவை தொகுதி. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து கோவை மக்களவைத் தொகுதியில் இரட்டை இலை போட்டியிட்டதில்லை.
கூட்டணிக் கட்சிகளுக்கே விட்டுத் தந்திருக்கிறது. வெற்றி முகம் காட்டி பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களாக, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான வர்களாக பா.ஜ.க. சி.பி.ராதாகிருஷ்ணனும், அ.தி.மு.க. ஏ.பி.நாகராஜனும் மிளிர்கிறார்கள்.
தொழில்துறை சீர்கேடு, பணப்புழக்கம் இன்மை, மின்வெட்டு, வறட்சி, நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட விஷயங்களில் அக்கறை காட்டாத அ.தி.மு.க அரசு மீதும், மத்திய அரசில் மிக நீண்ட காலம் அங்கம் வகித்த தி.மு.க மீதும் உள்ள மக்களின் கோபம் பா.ஜ.கவிற்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை மோடி வருகையும், அவர் பிரச்சாரமும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இளைஞர்கள் நாவிலிருந்து ஒலிப்பது மோடி நாமமே என்பதும், சந்து, பொந்துகள் எல்லாம் புகுந்து, சி.பி.ராதாகிருஷ்ணன் ஓட்டுக்கேட்டதும், 1998, 1999-2004 வரை எம்.பியாக இருந்த போது செய்த பணிகளை அவர் பட்டியலிட்டதும் தாமரைக்கு வலு சேர்க்கிறது.
இந்த பா.ஜ.க ஆதரவு முகம் எல்லாம் ஏற்கனவே 2011ல் அ.தி.மு.கவிற்கு ஓட்டுப்போட்டதாக இருப்பதும், ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு முகமும், கிரைண்டர், மிக்ஸி, பேன் போன்ற இலவச திட்டங்கள் சென்று சேராத மக்களின் எண்ணிக்கை மிகுதியும் அ.தி.முக.வின் பலத்தை நன்றாகவே அசைத்துப் பார்த்து அதை தோல்வி முகத்திற்குள் தள்ள முயற்சிக்கிறது.
அது தவிர தொழிற்சாலைகள் மூடல், மின்வெட்டு, பாதி நேர வேலையின்மை, சிறுதொழில்கள் வளர்ச்சியின்மை, எளிய உழைக்கும் மக்களிடம் பணப்புழக்கமின்மை, கடும் வறட்சி, குண்டும், குழியுமான சாலைகள், பாதியில் வருடக்கணக்கில் முடங்கிக்கிடக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், அரைகுறையாக மூலைக்கு மூலை மேம்பாலப் பணிகள் என எல்லாமே அ.தி.மு.க வேட்பாளரை அவதிக்குள்ளாக்குகிறது. 3 ஆண்டுகளாக கவுன்சிலர்களின் பணிகள், உள்ளாட்சியில் நடக்கும் குடிநீர் இணைப்பு முதல் பாதாளச்சாக்கடை இணைப்பு வரை லஞ்சம் என சகட்டு மேனிக்கு ஆளுங்கட்சியின் பால் மக்களின் கோபம் கொப்பளித்து அ.தி.மு.கவின் கோட்டை என்ற முழக்கத்தை ஓட்டையாக்கப் பார்க்கிறது.
தி.மு.க வேட்பாளர் கி.கணேஷ்குமாருக்கு கட்சி ஓட்டுக்களும், சிறுபான்மையினர் ஓட்டுக்களும் கிடைக்கும் என்றாலும் கடந்த கால தி.மு.கவின் குடும்ப ஆட்சி, சொத்து சேர்ப்பு போன்ற விஷயங்களில் மக்கள் இன்னமும் ஆழமான வெறுப்பில் இருப்பதைக் காணமுடிகிறது. சரியான பிரதமரை இனம்கண்டு சொல்லாதது அ.தி.மு.க., தி.மு.க இரண்டுக்குமே பாதகம்.
தலைவர்களின் பிரச்சார ரீதியில், கூட்டம் சேர்ந்த விதத்தில் பார்த்தால் முதலிடத்தில் அ.தி.மு.க வேட்பாளரே முன்னிலை வகிக்கிறார். ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது வந்த தொண்டர்கள் கூட்டம் சுமார் 1 லட்சம் என்றால் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வந்த கூட்டம் வெறும் 30 ஆயிரம்தான். மோடிக்கு வந்தது 15 ஆயிரம் தொண்டர்கள் என்றாலே அதிகம். ஜெவுக்கு வந்தது ஒரே ஒரு தொகுதிக் கூட்டம், கருணாநிதிக்கும், மோடிக்கும் வந்ததோ 3 தொகுதிகளின் கூட்டம். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது பிரச்சார ரீதியாக முதலிடத்தில் அ.தி.மு.க, அடுத்த இடத்தில் தி.மு.க, அதற்கடுத்த இடத்தில் பா.ஜ.க. வந்துவிடுகிறது.
மக்களின் பேச்சில் எதிரொலிப்பது அ.தி.மு.க., பா.ஜ.க என்பதால் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும்மோதல் இருப்பதும் புலனாகிறது.
மொத்தம் 80 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானால் கூட தி.மு.க தனது கட்சி ஓட்டுக்கள் 24 சதவீதத்தையும், சிறுபான்மை, தலித், ஆளுங்கட்சி அதிருப்தி ஓட்டுக்களை அள்ளி, உதிரிக் கட்சிகள் 5 சதம் ஓட்டுக்களை கொத்திக்கொண்டால் கூட சைக்கிள் இடைவெளியில் தி.மு.க வென்று விடுமோ என்று கூட துல்லிய கணக்கிடுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆக 6 கட்சிகள் போட்டியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் ஆர்.பிரபு, பி.ஆர். நடராஜன் தலா 1 லட்சம் வாக்குகளைப் பெற்றாலும் கூட முக்கிய மற்ற கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.கவிற்குள் கடும் போட்டி நிலவுவதே உண்மை. இந்த மூன்றில் எந்தக்கட்சி வென்றாலும் சில ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்திலேயே வெல்லும் என்பதே இந்த தொகுதியின் நிலைமை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT