Published : 15 Mar 2015 11:31 AM
Last Updated : 15 Mar 2015 11:31 AM

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு டிராபிக் ராமசாமி மாற்றம்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்ததும் சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், டிராபிக் ராமசாமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடனடியாக அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை 9 மணி அளவில் டிராபிக் ராமசாமி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, ‘‘டிராபிக் ராம சாமிக்கு சிறுநீரக பாதையில் உள்ள பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறுநீரகம், நரம்பியல், இதயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் டாக்டர்களின் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x