Published : 29 Apr 2014 10:30 AM
Last Updated : 29 Apr 2014 10:30 AM
நகரின் பிரச்சினைகளுக்கு மூல ஆதாரமாக விளங்குவது சாக்கடையும், குப்பைகளும்தான். அதை சமாளிக்க அரசின் திட்டங்களும், கண்டுபிடிப்புகளும் நாளுக்கு ஒன்றாய் வெளிவருகின்றன. ஆனால் அதிக செலவு, நீடிக்காத உழைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாதியிலேயே பயனற்று விடுகின்றன.
ஆனால், கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிக்கும் தொழில்நுட்பம் சமீப காலமாக மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதில் புது முயற்சியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது, கழிவுநீரிலிருந்து மின்சாரம் மற்றும் உரத்தை தயாரித்து, வெளியேற்றும் சுத்திகரித்த நீர் விவசாயத்திற்கும், கழிவுநீர் தேங்காததால் சூழலுக்கு ஏற்படும் பாதுகாப்பு என நான்கு வித நன்மைகள், ஒரே திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண் பொறியியல் கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் உயிர் சக்தித் துறை சார்பில் கழிவுநீரிலிருந்து நொதித்தல் முறையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. துறை பேராசிரியர்களின் 6 வருட முயற்சியால் இதற்கான கருவி கண்டறியப்பட்டு, வெற்றிகரமாக சிறு குறு தொழில்நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து உயிர் சக்தித் துறை தலைவர் டாக்டர் எஸ்.காமராஜ் கூறுகையில்,
பெரும்பாலான பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏரேட்டர் எனப்படும், காற்று கழிவுகளோடு இணைந்து உயிரியல் மாற்றம் ஏற்படுத்தும் முறையை பின்பற்றுகின்றன. 24 மணி நேரமும் இயங்கும் இந்த சுத்திகரிப்பு நிலையங்களில் தடையில்லா மின்சாரம் தேவைப்படுகிறது.
நாங்கள் தயாரித்துள்ள இந்த திட்டத்தில், கழிவு நீரை, காற்றில்லாத நிலையில் நொதித்தல் முறையில் சுத்திகரிக்கப்படுகிறது. அதில் வெளிப்படும் மீத்தேன் வாயுவைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இதில், கழிவுநீரை சுத்திகரிக்க சில மணி நேரங்கள் தான் ஆகின்றன. சிறிய அளவில் பொருத்த ரூ.1 லட்சமும், பெரிய நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
20 ஆண்டுகள் இயங்கும் வகையில் இதனை வடிவமைத்துள்ளோம். தற்போது உடுமலை அருகே உள்ள காகித ஆலைக்கு இந்த கருவி பொருத்தியுள்ளோம். விரைவில், பல்கலைக்கழக வளாகத்தில் முழு அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT