Published : 26 Mar 2015 10:17 AM
Last Updated : 26 Mar 2015 10:17 AM

2016 மார்ச்சில் தமிழக அரசின் கடன் ரூ.2.11 லட்சம் கோடியாக இருக்கும்: டாஸ்மாக் வருவாய் இலக்கு ரூ.30 ஆயிரம் கோடி - நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் தகவல்

அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.2.11 லட்சம் கோடி யாக இருக்கும் என்று நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர் களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,616 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2016 மார்ச் இறுதியில் தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் ரூ.2,11,483 கோடியாக இருக்கும். அரசு வாங்கும் கடன் தொகை, முதலீட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, வரி வருவாயும் அதிகரிக்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் தமிழக அரசுக்கு உள்ளது.

மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை அளவு 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், 2.89 சதவீதமாக மட்டுமே இருக்கும். மாநிலத்தின் மொத்த கடன்களின் அளவு வரையறையைவிட (25 சதவீதம்) குறைவாக, 19.23 சதவீதம் அளவிலேயே உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு (டான்செட்கோ) அரசு ரூ.7,200 கோடி கடன் கொடுத்துள்ளது. மற்ற நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.73,000 கோடி பெறப்பட்டுள்ளது. டான்செட்கோவின் மொத்தக் கடன் ரூ.80,200 கோடி. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மூதலீட்டுக்காக ரூ.7,800 கோடி கடன் வாங்கியிருக்கிறது.

தொழில் தொடங்குவதற்காக பல்வேறு துறைகளில் இருந்து தேவைப் படும் உரிமங்கள் மற்றும் ஒப்புதல்களை தொழில்முனைவோர் பெறுவதற்கு வசதியாக அவர்களுக்காக ஒற்றைச் சாளர முதலீட்டாளர் இணையதளம் தொடங்கப்படுகிறது. தொழில்து றைக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை யால் மின்வர்த்தகம் (இ-காமர்ஸ்) மேம் படும்.

மொத்த நிதி ஒதுக்கீட்டில் சமூக நலத்திட்டங்கள் மற்றும் மானியத்துக்கு 33.51 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் வணிக வரி மூலம் ரூ.72,068.40 கோடியும், முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் ரூ.10,385.29 கோடியும், ஆயத்தீர்வை மூலம் ரூ.7,296.66 கோடியும், மோட்டார் வாகன வரி மூலம் ரூ.4,882.53 கோடியும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் கடந்தாண்டு ரூ.26,188 கோடி வருவாய் கிடைத்தது. வரும் ஆண்டில் ரூ.29,672 கோடி வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதார சூழல் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் மகாராஷ் டிரம், தெலங்கானா, ஆந்திரம், மத்தியப்பிரதேசம் போன்ற பெரும் பாலான மாநிலங்கள் பற்றாக்குறை பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்துள்ளன. இது பெரிய பிரச்சினை இல்லை.

2014-15-ம் ஆண்டில் வளர்ச்சி வீதம் 7.25 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-16ல் வளர்ச்சி வீதம் 9 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x