Published : 18 Apr 2014 06:01 PM
Last Updated : 18 Apr 2014 06:01 PM
கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் பேசியதாவது:
இந்தியாவின் வடமேற்கில் பாகிஸ்தான், வட கிழக்கில் சீனா, தெற்கே இலங்கை என, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அது அபாயமாக மாறும் போது 7,600 கிலோ மீட்டரில் பரந்து விரிந்து இருக்கும் கடற்கரை மக்களும் தாக்கப்படுவர். இது தடுக்கப்பட வலுவான அரசியல் தலைமை தேவை. அதனால்தான், மீனவப் பிரதிநிதியாக மோடியை ஆதரிக்கிறேன்.
மோடியின் எண்ணங்கள் தொலைநோக்குப் பார்வையுடனும், மக்களின் திட்டங்களை அறிந்து செயல்படக் கூடியதாகவும் உள்ளது. அவருடைய உரைகள் செயலாக்கம் உடையதாக இருக்கின்றன.
தேநீர் கடை வியாபாரியின் மகனாக பிறந்து, குஜராத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வரும் மோடி, மக்களின் தேவைகளை உணர்ந்த தலைவன். புனே பல்கலைக்கழகத்தில் அண்மையில் பேசிய அவர், `பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சி கட்டுரைகள் செல்லரித்துப் போய் கிடக்கின்றன. அவையெல்லாம் நாட்டு நலன் காக்க நாட்டு வளத்துக்காக பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று சொன்னார். இப்படி மனித வளத்தை மதிக்கக்கூடிய ஒருவர் தான் பிரதமராக வேண்டும். மோடி பிரதமராவதன் மூலம் தொழில் வளம் பெருகும். கடற்கரை பாதுகாப்பும் பலம் பெறும், என்றார்.
எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் பேச்சு பா.ஜ.க.வுக்கு புதிய நம்பிக்கை
கன்னியாகுமரியில் நடைபெற்ற பா.ஜ.க., பிரச்சாரக் கூட்டத்தின் சுவாரசியங்கள்:
புதன்கிழமை இதே மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பங்கேற்ற கூட்டத்துக்கு வந்திருந்ததை விட அதிகளவில் தொண்டர்கள் வியாழக்கிழமை வந்து இருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மோடியும் தன் பேச்சில் 18 முதல் 28 வயது வரையுள்ள இளைஞர்களின் வாக்கு வங்கியை குறி வைத்தே பேசினார். அதற்கு கைத்தட்டல் அதிகம் கிடைத்தது.
நம்பிக்கை
மோடி வருவதற்கு முன் மேடையேறிய சாக்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் `மீனவர்களின் வாழ்வை காக்க மோடியால் தான் முடியும்’ என்று பேச, கூட்டத்தில் பலத்த கரகோஷம். கன்னியாகுமரி தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மீனவர் வாக்குகள் இருக்கும் நிலையில் ஜோ.டி.குரூஸின் பேச்சு பா.ஜ.கவினருக்கு நம்பிக்கையை தந்தது. மோடியும் பேச்சின் ஊடே ஜோ.டி.குரூஸைப் பற்றி குறிப்பிட்டார்.
போலீஸ் கெடுபிடி
கூட்ட மைதானத்தில் தொண்டர்களை அனுமதிக்க போலீஸார் ஏக கெடுபிடி காட்டினர். இதனால், தொண்டர்கள் உள்ளே வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. அப்போது மேடையில் பேசிய மாவட்டத் தலைவர் தர்மராஜ், `போலீஸார் ஒத்துழைப்பு கொடுங்கள். தொண்டர்களை தாமதிக் காமல் உள்ளே விடுங்கள்’ என்றார்.
`வணக்கம்’ என தமிழில் பேச ஆரம்பித்து, தொடர்ந்து ஹிந்தியில் பேசினார் மோடி. அதனை பா.ஜ.க. மூத்த உறுப்பினர் ராமகிருஷ்ணன் மொழி பெயர்த்தார். மாற்றுத் திறனாளியான இவர், மோடி பேசிய 40 நிமிடங்கள் வரை ஊன்றுகோலின் துணையுடனே நின்று கொண்டிருந்தார். பிரச்சார மேடையில் பா.ஜ.க. தேசியத் தலைவர்கள் மற்றும் தமிழகத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன.
சுதாரிப்பு
மோடி பேச்சின் போது கூட்டணித் தலைவர்களின் பெயர்களை இரு முறை சொன்னார். ஒருமுறை வைகோ பெயரை மறந்து விட, மொழிபெயர்த்தவர் சுதாகரித்துக் கொண்டு வைகோ பெயரையும் சேர்த்துக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT