Published : 26 Mar 2015 02:25 PM
Last Updated : 26 Mar 2015 02:25 PM

நேர்மையாக தேர்தல்களை நடத்த விஜயகாந்த் யோசனை

தேர்தலில் லஞ்சம், ஊழலை தடுக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் 100 சதவிகிதம் பிழையில்லாமல் இருப்பதற்காக, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவைகளை வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கும் திட்டத்தை நேற்று முதல் செயல்படுத்தி வருவதாகவும், அதற்காக தமிழகத்தில் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்காளர்களின் முழு விவரங்களை சேகரிக்கிறார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க சிறப்பான திட்டமாகும்.

இதனால் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் அடியோடு நீக்கப்படுவார்கள் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தான் ஓய்வு பெற்ற பிறகு தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியவரும், வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டபடி லஞ்சம் வாங்குவது குற்றம், அதை கொடுப்பதும் குற்றம். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பணம் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்குகளை பெறும் போக்கு தமிழத்தில் புற்றுநோயை போல பரவியுள்ளது.

வாக்களிக்க பணம் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்பதை போன்ற மனநிலையை தமிழக மக்களிடம் உருவாக்கிவிட்டார்கள். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அனைத்து அலுவலர்களையும் மற்றும் காவல் துறையையும் கையிலே வைத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசமாக பரிசு பொருட்கள் வழங்குதல், தேர்தலில் அதிக செலவு செய்தல், வாக்களர்களை தங்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துதல், அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் என தங்களுக்கு சாதகமான நிலையை தேர்தல் நடைபெறும் போது உருவாக்கி கொள்கிறார்கள்.

மேலும் இடைத்தேர்தல் என்றால் இச்செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். எனவே இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி அதிகாரிகள் பொது மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சிங்கப்பூரை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற வைத்து சுமார் முப்பது ஆண்டுகாலம் பிரதமராக இருந்து தற்போது மறைந்த திரு.லீ குவான் யூ அவர்கள் லஞ்சம், ஊழல், தேர்தல் முறைகேடு என எதுவும் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து, சிங்கப்பூர் தேசத்தை உருவாக்கி அந்நாட்டு மக்களால் தேசத்தந்தை எனப் போற்றப்பட்டவர். சிங்கப்பூரில் லஞ்சம், ஊழல் தலையெடுத்தால் நான் மீண்டும் வருவேன் என சொல்லி மறைந்துள்ளார்.

நேர்மையான மக்கள் தலைவராக இருந்ததால் தான் சிங்கப்பூர் உலகமே வியக்கும் நாடாக மாறியுள்ளது. அதுபோல் இந்தியாவும் மாறவேண்டும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளது. இந்தியா வல்லரசாக வேண்டுமானால் தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே வல்லரசாகிவிடும்.

மார்ச் 25 முதல் ஏப்ரல் 6 வரையில் வீடு வீடாக வருகைதரும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கும் ஏப்ரல் 12, 26 மற்றும் மே 10, 24 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கும், தேமுதிக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் லெவல் ஏஜெண்ட் (BLA) அதாவது வாக்குச்சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்றிணைந்து வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் உதவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x