Published : 16 Feb 2014 12:45 PM
Last Updated : 16 Feb 2014 12:45 PM

வாக்காளருக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க கிராம அளவில் கண்காணிப்புக் குழு: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க கிராம அளவில் ரகசிய கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய தேர்தல் வரவு - செலவு கண்காணிப்பு ஆணையர்

பி.கே.தாஸ் தலைமையில் நடை பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டம் முடிந்த பிறகு பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

ரகசிய கண்காணிப்புக் குழு

தேர்தலின்போது வாக்காளர் களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க கிராம அளவில் ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். இந்தத் திட்டம் சோதனை முறையில் முதன்முதலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பது தொடர்பாக பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிப்பது வழக்கம். ஆதாரம் இல்லாததால் அந்தப் புகார்கள் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

அதுபோன்று பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்தால் அதற்கான ஆதாரத் தை செல்போன் மூலமாக வோ, இ-மெயில் மூலமாகவோ அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்கள் தங்களுக்கு யாராவது பணம் கொடுக்க முன்வந்தால் அதை மறுக்க வேண்டும்.

தலைவர்கள் படம், சின்னம்

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துவிடும்.

எனவே, தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், சின்னம் இடம்பெறக்கூடாது. இடம்பெற்றி ருந்தால் அவற்றை மறைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

மத்திய தேர்தல் வரவு - செலவு கண்காணிப்பு ஆணையர் பி.கே.தாஸ் கூறியதாவது:

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பது குறித்து முகாந்திரம் இருந்தாலே தேர்தல் ஆணையத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும்.

பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடக்கூடாது. தேர்தல் குறித்து சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x