Published : 20 Mar 2015 09:00 AM
Last Updated : 20 Mar 2015 09:00 AM

சாது கிருஷ்ணவேணி அம்மாள் தங்கிய இடத்துக்கு உரிமை கோரும் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் மனு

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்தில் சாது கிருஷ்ணவேணி அம்மாள் தங்கி ஆன்மிகப் பணியில் ஈடு பட்ட பகுதிக்கு உரிமை கோரி தாக்கலான மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பப் பட்டுள்ளது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்துக்கு உள் பட்ட பகுதியில் கல்யாண தீர்த்தம் உள்ளது. இங்கு சாது கிருஷ்ண வேணி அம்மாள் என்பவர் பல ஆண்டுகளாக தங்கி ஆன்மிகப் பணியாற்றினார்.

சித்தர் ஒருவரை பின்தொடர்ந்து கல்யாண தீர்த்தம் பகுதிக்கு வந்த கிருஷ்ணவேணி அம்மாள், அதன்பிறகு வனத்தை விட்டு வெளியே செல்லவில்லை.

வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வனத்துக்கு சென்று கிருஷ்ணவேணி அம் மாளை சந்தித்து, தங்களது கஷ்ட நஷ்டங்களை தெரிவித்து மன அமைதி பெற்றனர். இதனால், வெளியூர்களில் இருந்தும் பலர் கிருஷ்ணவேணி அம்மாளை சந்திக்க வந்தனர். அவரை வன தேவதை என்றும், பொதிகை தேவதை என்றும் மக்கள் அழைத் தனர். சுமார் 45 ஆண்டுகள் வனப்பகுதியில் வாழ்ந்த கிருஷ்ண வேணி அம்மாள், முதுமை காரணமாக 2010-ல் இறந்தார். அவருக்கு கோயில் அமைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணவேணி அம்மாள் தங்கியிருந்த கல்யாண தீர்த்தம் பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் மற்றும் மடம் உள்ளது.கிருஷ்ணவேணி அம்மாள் மறைவுக்குப்பின், சென் னையைச் சேர்ந்த துரை வெங்க டேசன் என்பவர், தான் கிருஷ்ண வேணி அம்மாளின் வாரிசு என்றும், அவர் தங்கியிருந்த அடர் வனப்பகுதி தனக்கு சொந்தமானது என்றும் உரிமை கோரினார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில், அந்த இடத்துக்கு உரிமை கோரி துரை வெங்கடேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் துரை வெங்கடேசனுக்கு எதிராகவும், தங்களை எதிர்மனுதாரராக சேர்க்கவும் கோபால் மற்றும் தாமிரபரணி கல்யாண தீர்த்தம் அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

இதனிடையே இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை மூத்த நீதிபதி எஸ்.தமிழ்வாணனிடம் கோபால் வழக்கறிஞர் டி.அருள் நேற்று மனு அளித்தார். தலைமை நீதிபதிக்கும் அந்த மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவில், என் னதரப்பு வாதத்தை கேட்கவில்லை. வனத்துறை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x