Published : 21 Mar 2015 10:32 AM
Last Updated : 21 Mar 2015 10:32 AM
1998-ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அந்தச் சம்பவத்தால்தான் என் வாழ்க்கையும் திசை மாறியது என்கிறார் அபுதாஹிர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வகை நாணயங்கள், ராஜராஜ சோழன், ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்து நாணயங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட அந்தக் காலத்து வால்வு ரேடியோக்கள், சுவர் கடிகாரங்கள், ஐம்பது ஆண்டு களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் பத்திரிகைகள், 1936-ல் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பால்டா கேமரா, ஜெராடு ரெக்கார்டு பிளேயர்கள். இப்படி பல அரிய பொருட்களை தேடித் தேடி சேகரித்து வைத்திருக்கி றார் அபுதாஹிர்.
1935-ல் இங்கிலாந்தில் தயாரிக்கப் பட்ட பிலிப்ஸ் ரேடியோ, கிராமபோன் பெட்டிகள், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இங்கி லாந்து தயாரிப்பான போலீஸ் விசில், 1924-ல் அமெரிக்கா தயாரித்த ஹாம் ரேடியோ, 17-ம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகள், 1868-ல் வெளிவந்த பத்திரங் கள், பழைய தட்டச்சு எந்திரங்கள், டேபிள் மற்றும் சீலிங் ஃபேன்கள் என அந்த அறையெங்கும் நிரம்பிக் கிடக்கும் அபூர்வப் பொருட்கள் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. சாமானியரான அபுதாஹிரால் இத்தனையையும் எப்படி திரட்ட முடிந்தது?
அவரே சொல்கிறார்: “ஆரம்பத் தில் டி.வி. மெக்கானிக் கடைதான் வைச்சிருந்தேன். எங்க ஏரியாவுக்கு பக்கத்துலதான் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துச்சு. அதனால, அந்தச் சம்பவம் என்னோட வாழ்க் கையிலும் சோதனையை உண்டாக் கிருச்சு. அதுக்கு மேல என்னால அந்த ஏரியாவுல தொழில் பண்ண முடியல. அதனால, கோவைக்கு உள்ளேயே இடத்த மாத்திக்கிட்டு கார் சீட்டுக்கு கவர் தைக்கிற வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன்.
டி.வி. மெக்கானிக்கா இருந்தப் பவே அரிதான சில எலெக்ட்ரானிக் பொருட்களை பொழுது போக்கா சேர்த்து வைப்பேன். தொழில மாத் துன பின்னாடியும் அந்தப் பழக்கம் விடலை. கையில காசு இருந்தா உடனே பழைய இரும்புக் கடைக்கு போயிருவேன். பொக்கிஷமா பாது காக்க வேண்டிய பழம் பொருட்களின் அருமை அங்க இருக்கவங்களுக்கு தெரியாது. அங்க குவிச்சுப் போட்டி ருக்கிற பொருட்களில் இருந்து எனக்குத் தேவையானதை மட்டும் தேடி எடுத்துக்கிட்டு அதுக்கான காசை குடுத்துட்டு வந்துருவேன்.
ஒரு கட்டத்துல, பழைய இரும் புக் கடைகளை விட்டுட்டு அரிய பொருட்களை விற்கும் ஏஜெண்ட் களை தேடிப் பிடிச்சு பழையப் பொருட்களை வாங்க ஆரம்பிச்சேன். சாப்பாட்டுக்கு காசு வேணுமேன்னுகூட யோசிக்காம பைத்தியமா சுத்தித் திரிஞ்சு வாங்கிச் சேர்த்ததுதான் இத்தனையும்.
அனைத்துத் துறையிலும் ஆரம்பத் துல நாம எப்படி இருந்துருக்கோம்கிற அடையாளங்கள் இப்ப என்கிட்ட இருக்கு. இதை வைச்சு ஊர் ஊருக்கு கண்காட்சிகள்ல ஸ்டால் போட்டுட்டு இருக்கேன். சேலத்துல ஸ்டால் போட்டு ருந்தப்ப ரெண்டு பேரு வந்து இந்தப் பொருட்களை மொத்தமா விலைக்குக் கேட்டாங்க.
‘இது என்னோட வாழ்க்கை. நீங்க உண்மையான இந்தியனா இருந்தா இதுக்கு மேல என்னைய தொந்தரவு பண்ணாதீங்கன்’னு சொன்னேன். பேசாம போயிட்டாங்க.
பெரிய வீடுகட்டி அதுல பிரத்யேகமா ஒரு அருங்காட்சியகம் அமைக்கணும். அதுல வருங்கால சந்ததி பார்த்து பயனடையற மாதிரி இந்தப் பொருட்களை வைக்கணும். இதுதான் என்னோட ஆசை’’ பொது நலத்துடன் சொன்னார் அபுதாஹிர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT