Published : 16 Mar 2015 10:30 AM
Last Updated : 16 Mar 2015 10:30 AM
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள அரிய ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள் மற்றும் நூல்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அரிய திரட்டுகள் கடத்தப்படலாம் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனினும், அதற்கு வாய்ப்பில்லை என தஞ்சை ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் அரிய தகவல்களைக் கொண்ட மிகப் பழமையான ஓலை மற்றும் தாள் சுவடிகள், வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட 4,000 பழமையான நூல்கள் உள்ளன. இவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணியை நூலகத்தின் இயக்குநர் (பொறுப்பு) தஞ்சை ஆட்சியர் சுப்பையன் அண்மையில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், இந்தப் பணியை தனியாரிடம் ஒப்படைத் திருப்பதால் அரிய தகவல்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார் நூலகத்தின் முன்னாள் வெளியீட்டு மேலாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இங்குள்ள ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான இயந்திரம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த இயந்திரம் பெங்களூருவில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் யாருக்கும் முறையாக பயிற்சி அளிக்கப்படவில்லை. தனியாரிடம் டிஜிட்டல் மயமாக்கும் பணியை ஒப்படைத்தால் அவர்கள் மூலமாக ஆவணங்கள் வெளிநாடுகளுக்கு டிஜிட்டல் ரூபத்திலேயே கடத்தப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இங்குள்ள பணியாளர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களைக் கொண்டே இவற்றை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.
இதுகுறித்து நூலகத்தின் இயக்குநர் (பொறுப்பு) தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையனிடம் கேட்டபோது: இந்தப் பணியை தனியார் வசம் ஒப்படைத்திருக்கிறோம். தமிழ் பண்டிதர்களின் நேரடிக் கண்காணிப்பில் பணிகள் நடைபெறுவதால் இங்குள்ள ஆவணங்கள் வெளியில் கடத்தப்பட்டுவிடும் என்று யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று விளக்கமளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT