Published : 21 Mar 2015 09:40 AM
Last Updated : 21 Mar 2015 09:40 AM

தமிழகம் முழுவதும் மீண்டும் தாய் சேய் நல மருத்துவ முகாம்: 23 முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது

தமிழகம் முழுவதும் மீண்டும் வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 167 தாய் சேய் நல மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் கர்ப்பிணி கள் மற்றும் குழந்தைகளுக்காக கிராமப் பகுதிகள் மற்றும் சிறு நகரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 670 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பேறுகால பராமரிப்பு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், குழந்தைகள் பராமரிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதனால் இந்த முகாம்கள் பொது மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 167 சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்கள் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் (டிபிஎச்) சார்பில் மார்ச் 23-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மீண்டும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி, ரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை, அனைத்து தாய்சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பிக்மி எண் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்தல், மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு கவனம் தேவைப்படும் தாய்மார்களுக்கு உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல் ஆகியவை நடை பெற உள்ளன.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் முகாம்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணிகளும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x