Published : 09 Mar 2015 01:31 PM
Last Updated : 09 Mar 2015 01:31 PM

இந்தியாவின் மகள் ஆவணப்படத்துக்கான தடையை நீக்க திருமாவளவன் வலியுறுத்தல்

டெல்லி பலாத்கார சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப் படத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நிர்பயா பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து உலகப் புகழ்பெற்ற ஆவணப் பட இயக்குனர் லெஸ்லீ உட்வின் தயாரித்துள்ள ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும்.

கருத்துரிமையைப் பறிக்கும் போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும் என மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

தானும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான் எனக் கூறியிருக்கும் லெஸ்லீ உட்வின் அந்த ஆவணப் படத்தை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் எல்லாவிதமான சட்டரீதியான அனுமதியையும் பெற்றிருப்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கியிருக்கிறார்.

அந்த ஆவணப் படம் உலகமெங்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களின் பிரச்னையைப் பேசுவதாக இருக்கிறது என அதைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குத் தடை விதிப்பது எந்தவகையிலும் நியாயமல்ல.

'இந்தியாவின் மகள்' ஆவணப் படத்துக்கு விதித்திருக்கும் தடையை உடனடியாக மத்திய அரசு விலக்கிக்கொள்ளவேண்டும். நீதிபதி வர்மா கமிஷன் அளித்த பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x