Published : 13 Mar 2015 03:07 PM
Last Updated : 13 Mar 2015 03:07 PM

நிலச்சட்டத்தை ஆதரித்தது ஜெயலலிதாவின் நிதானமற்ற போக்கு: விஜயகாந்த் விமர்சனம்

"கடந்த மத்திய ஆட்சியில் ஒரு நிலைப்பாடு, தற்போதைய மத்திய ஆட்சி அமைந்தபோதும் அதே நிலைப்பாடு. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் அப்படியே அந்தர் பல்டி அடித்து நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன்?" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலச்சட்ட விவகாரத்தில் அதிமுக நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிய அவர், "நிலையற்ற கொள்கையும் நிதானமற்ற போக்கும் கொண்டுள்ள ஜெயலலிதா, தன்னுடைய வழக்கு சதியும் விதியும் இணைந்து நடத்திய சதிராட்டத்தால் தொடுக்கப்பட்ட வழக்கு என்று புலம்புகிறார்" என்று அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' மத்திய அரசு நிலம் கையப்படுத்தும் சட்டத்தை 9 முக்கிய திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளது. அதே சமயத்தில் அரசு நிலத்தை கையகப்படுத்தும் போது பெரும்பாலான விவசாயிகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்கின்ற விதி இடம் பெற்று இருந்தால் விவசாயிகள் மிக்க மகிழ்ச்சியோடும், அச்சமின்றியும் இருந்திருப்பார;கள்.

முன்னாள் முதலமைச்சர் குற்றவாளி ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்திலும் தனது அறிக்கைகளிலும் நிலம் கையப்படுத்தும் சட்டத்தை கடந்த ஆட்சியிலிருந்து தற்போதைய ஆட்சி வரை கடுமையாக எதிர்த்து விட்டு இப்போது திடீரென ஆதரிப்பது தமிழக மக்கள் மத்தியில் ஓராயிரம் கேள்விகளை எழுப்பி உள்ளது.

இச்சட்டத்ததை எதிர்த்து அதற்காக விவசாயிகள் மத்தியில் பாராட்டுகளை பெற்று, அவர்கள் நலனை காப்பதிலே மிகுந்த அக்கறை கொண்டு இருந்தவரை போல எல்லாம் பேசியவர் இன்று திடீரென மாறியதன் காரணம் என்ன? சதியும் விதியும் கூடி செய்த செயல் என்று சொன்னாரே, அதற்கு பிராயச்சித்தம் தேடத்தான் இந்த மன மாற்றமோ.

தமிழகத்தில் கெயில் நிறுவனத்தின் மூலம் விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் உச்ச நீதி மன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல் டெல்டா மாவட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்திலும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் ஆய்வு பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, இது போல பல திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. அதிமுக அரசு இதையெல்லாம் எதிர்த்தே வந்துள்ளது. நிலம் கையப்படுத்தும் சட்டத்தை திடீரென ஆதரித்ததை போல இந்த திட்டங்களிலும்; அதிமுக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த மத்திய ஆட்சியில் ஒரு நிலைப்பாடு, தற்போதைய மத்திய ஆட்சி அமைந்தபோதும் அதே நிலைப்பாடு. ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் அப்படியே அந்தர் பல்டி அடித்து அந்த சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன்? நிலையற்ற கொள்கையும் நிதானமற்ற போக்கும் கொண்டுள்ள குற்றவாளி ஜெயலலிதா, தன்னுடைய வழக்கு சதியும் விதியும் இணைந்து நடத்திய சதிராட்டத்தால் தொடுக்கப்பட்ட வழக்கு என்று புலம்புகிறார்.

தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களிலிருந்து விடுபடத்தான் இந்த ஆதரவோ என மக்கள் கருதுகிறார்கள். எது எப்படி ஆகினும் நிச்சயம் நீதி வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பில் தமிழகமே உள்ளது. தனது சுய நலனுக்காக விவசாயிகளின் நலனை புறக்கணித்தால் ஆட்சியும் மாறும் - காட்சியும் மாறும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும். எனவே குற்றவாளி ஜெயலலிதா சுய விருப்பு வெறுப்பு பாராமல் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அனைத்து பிரச்சினைகளிலும் முடிவெடுக்க வேண்டும். இனியாவது தமிழகத்தின் நலனுக்காவும் மக்களின் பயனுக்காவும் இவரது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x