Published : 02 Mar 2015 10:42 AM
Last Updated : 02 Mar 2015 10:42 AM

ஆரோவில் திருவிழா சென்னையில் தொடங்கியது

ஆரோவில் என்றால் என்னவென்று தமிழ்நாட்டு மக்களுக்கும் பிறருக்கும் விளக்கும் ஒன்றரை மாத திருவிழா சென்னையில் நேற்று தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ‘ஆரோவில்’ 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, ஸ்ரீ அரவிந்தரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ‘அன்னை’ என்றழைக்கப்படும் மிர்ரா அல்பாசா என்பவரால், தொடங்கப்பட்டது. உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் எந்த பேதமும் இல்லாமல் ஒன்றாகக் கூடி வாழ்ந்து மனிதத்தை உன்னதத்தை உணர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.

இதில் தற்போது 50 நாடுகளை சேர்ந்த 2500 பேர் வசிக்கின்றனர். அவர்கள் இயற்கை பாதுகாப்பு, காடு வளர்த்தல், முதியோர் இல்லம் பராமரித்தல், பலவித கலைகள் கற்றல் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரோவில்லின் செயல்பாடுகளை விளக்குவதற்காக ‘ஆரோவில் என்றால் என்ன’ என்ற திருவிழா மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

இந்த திருவிழாவின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:

மனித மாண்புகளை அடிப்படையாக கொண்டதுதான் இந்திய கலாச்சாரம். சர்வதேச ஒற்றுமைக்கு பிரதான காரணியாக இருப்பது ஆரோக்கியமான சிந்தனையும் செயலும் தான். இந்த திருவிழாவின் போது பல்துறை வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள வாய்ப்புகள் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசும்போது, “ஆரோவில் கட்டப்படும்போது 124 நாடுகளிலிருந்து மக்கள் தங்கள் நாட்டு மண்ணை கொண்டு வந்தனர். விலங்கு மற்றும் தாவரங்களின் பல்லுயிர் பரவலை கொண்டாடுவது போல மனிதர்களின் வேற்றுமையையும் கொண்டாட வேண்டும்” என்றார்.

திருவிழா ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த எலைன் பிலிப்ஸ், “சென்னைக்கு அருகிலேயே இருந்தாலும் ஆரோவில் பற்றி பலருக்கு இன்னும் தெரியவில்லை. டெல்லியில் ஏற்கெனவே இதுபோன்ற திருவிழா நடத்தியுள்ளோம். தற்போது சென்னையில் நடத்துவது பலனளிக்கும் என்று நம்புகிறோம்” என்றார். சர்வதேச கீதம் இசைப்பது, கலை கண்காட்சி, நீடித்த எதிர் காலத்துக்கான கருத்தரங்கம், பன்முக சமூகத்தின் தன்மைகள் குறித்து கருத்தரங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இந்த திருவிழாவின் போது நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x