Published : 25 Feb 2014 08:32 AM
Last Updated : 25 Feb 2014 08:32 AM
எப்படி வலை வீசினாலும் திமுக.வை மடக்க முடியாது என அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதனால், விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் `அப்செட்' ஆனதாகக் கூறப்படுகிறது.
திண்டுக்கல் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத் திருமண விழா திங்கள் கிழமை திண்டுக்கல்லில் நடை பெற்றது. கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். மாநில துணைப் பொதுச் செயலர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பொன்முடி, இரா.ஆவுடையப்பன், பொங்கலூர் பழனிச்சாமி உட்பட ஒட்டுமொத்த தி.மு.க. நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் திண்டுக்கல் என்.எஸ்.வி.சித்தன், விருதுநகர் மாணிக்கம் தாகூர், தேனி ஜே.எம்.ஆரூண் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.
விழா மேடையில் தி.மு.க. வினருடன் நெருக்கமாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்த என்.எஸ்.வி.சித்தன் எம்.பி. ஒருகட்டத்தில் ஸ்டாலினின் அருகே சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தினார்.
இதைப் பார்த்த அருகிலிருந்த துரைமுருகன், மு.க.ஸ்டாலினிடம் அவரைப் பற்றி ஏதோ விமர்சித்துப் பேசினார். அதன்பின், மேடையில் பேசிய டி.ஆர்.பாலு, என்.எஸ்.வி.சித்தன் எம்.பி. மீனுக்கு விலை வீசுகிற மாதிரியே ஸ்டாலினுக்கு சால்வை போர்த்தி வளைக்கப் பார்க்கிறார், காங்கிரஸாரைக் கண்டாலே பயந்து ஓட வேண்டியது உள்ளது என பொடி வைத்துப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது: திருச்சி மாநாடு தற்போதுதான் நடந்து முடிந்துள்ளது. மீண்டும் திண்டுக்கல்லில் ஒரு தி.மு.க. மாநாடு நடப்பதுபோல் எழுச்சி, உணர்ச்சி ஆரவாரத்தோடு தி.மு.க.வினர் திரண்டுள்ளனர். தி.மு.க.வினரின் இந்த எழுச்சி, ஆரவாரம் கண்டிப்பாக 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றியைப் பெற்றுத்தரும் என்பதில் இம்மியளவும் சந்தேகம் இல்லை. டி.ஆர்.பாலு பேசுகை யில், என்.எஸ்.வி.சித்தன், மீனை வலையில் சிக்கவைக்கிற மாதிரி எனக்கு சால்வை அணிவித்ததாகத் தெரிவித்தார். இங்குள்ள அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன், என்னை வேண்டுமென்றால் சுலபமாக மடக்கிவிடலாம். ஆனால், எப்படி வலை வீசினாலும் எங்கள் இயக்கத்தை (தி.மு.க.) மடக்க முடியாது. தி.மு.க. கூட்டணி குறித்து ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டோம். திருச்சி மாநாட்டிலும் மிகத் தெளிவாகக் கூறிவிட்டோம்.
ஐ.பெரியசாமி மகன் செந்தில் குமார், இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலராக கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுவதால் தி.மு.க.வினர் வாரிசு அரசியல் செய்கின்றனர் எனக் கூறுவர். ஆமாம், எங்கள் இயக்கத்தில் வாரிசு அரசியல் உண்டு. எங்க ளுக்கு வாரிசுகள் இருக்கிறார்கள். அதனால், வாரிசு அரசியல் செய்கிறோம். வாரிசாக இருப்பதாலே இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. அதற்கான, தகுதியும், திறமையும் எங்களிடம் உள்ளது என்றார்.
காங்கிரஸார் அதிர்ச்சி:
மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. திடீரென்று பா.ஜ.க. அணியை நோக்கி காய் நகர்த்துவதால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தன. அதை உறுதிப்படுத்துவதுபோல், திங்கள்கிழமை தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத் திருமண விழாவில் காங்கிரஸ் எம்.பி.க்கள், அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆனால், மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின் பேச்சு, காங்கிரஸுடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது எனக் கூறுவதுபோல் இருந்தது. அதனால், இந்த விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் மரியாதை நிமித்தமாக சாதாரண சால்வை அணிவித்ததற்கு, ஏதோ நாம கூட்டணி வலை வீசின மாதிரியும், அவர்கள் வேண்டாம் என சொல்கிற மாதிரியாகவும் இருக்கிறது என “அப்செட்” ஆனதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT