Published : 18 Mar 2015 09:15 AM
Last Updated : 18 Mar 2015 09:15 AM

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 28-ல் கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்: காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் மார்ச் 28-ல், காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் மாலை தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வலிவலம் மு.சேரன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணி யரசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் த.மணிமொழியன், திருச்சி மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை, காவிரி விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் காவிரி தனபாலன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் சி.ஆறுமுகம், ஏரி- கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விசுவநாதன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் கோ.திரு நாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் பெ.மணியரசன் அளித்த பேட்டி:

காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. அதைத் தடுக்க தமிழக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி பிரச்சினை யில் மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்டப்பணிகளுக் காக கர்நாடக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

அங்கு அணை கட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையிடம் இருந்து தடையில்லாச் சான்று பெறாத நிலையில், சட்டவிரோதமாக மேகேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்துவரும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அணை கட்டுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மார்ச் 28-ல் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தலைமை இடங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

பதவி விலக வலியுறுத்துவோம்

மேலும், ஏப்.5-ல் விவசாய பிரதிநிதிகள் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்து வோம். அதற்கு, அவர்கள் முன் முயற்சி எடுக்கவில்லை என்றால், அவர்களை பதவி விலகக் கோரி வலியுறுத்துவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x