Published : 04 Apr 2014 10:42 AM
Last Updated : 04 Apr 2014 10:42 AM

தனுஷ்கோடியில் கரைவலை இழுக்கும் மீனவ பெண்கள்

தனுஷ்கோடி கடலோர பகுதியில் வறுமை காரணமாக கரைவலை இழுப்பதில் மீனவப்பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர்களின் பழமையான மீன்பிடி முறைகளில் கரைவலை முதன்மையானது ஆகும். இத்தகைய பாரம்பரியமான கரைவலை மீன்பிடிமுறையை இலங்கையிலும், தமிழகத்தின் சில பகுதியிலும் உயிர்ப்புடன் இன்னும் இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது.

முதலில் கடற்கரையிலிருந்து கரை வலையை கடலில் குறிப்பிட்ட தொலைவில் "யு' வடிவில் வடிவமைத்து அமைப்பர். பின்னர் வலையின் இருபுறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாக கரையில் நின்று மீனவர்கள் இழுப்பார்கள். கடலில் வலையின் மையப் பகுதியில் படகில் ஒருவர் வழிகாட்டியாக செயல்படுவார். கயிற்றின் நீளம் குறைந்த பட்சம் 100 மீட்டர் வரையிலும் இருக்கும். ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு கயிற்றின் நீளம் அதிகரித்துக் கொள்ளப்படுகிறது. கயிற்றில் பனை ஓலைகளை கட்டி இவ்வாறு இழுக்கும் மற்றொரு மீன்பிடி முறைக்கு ஓலை வலை என்று பெயர்.

விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று இறால், கணவாய் போன்ற ஏற்றுமதி ரக மீன்களை பிடித்து வருகின்றனர். அவை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் உள்ளுர் மக்களின் மீன் தேவையை தனுஸ்கோடி கரைவலை மீனவர்கள் தான் பூர்த்தி செய்கிறனர்.

1964-ம் ஆண்டு டிசம்பர்-22ந்தேதி அன்று இரவு கோரப்புயல் தனுஷ்கோடியைத் தாக்கி 50 ஆண்டுகள் ஆகப் போகின்றன. அந்தக் கோரப் புயலின் தாக்கத்திலிருந்து இன்று வரை தனுஷ்கோடி மீளவே இல்லை. இன்று தனுஷ்கோடியில் வெறும் இருநூறு பாரம்பரியமான மீனவக் குடும்பங்கள் மட்டுமே எந்தவிதமான சாலை, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி ஓலைக் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் வறுமை காரணமாக தனுஸ்கோடி மீனவ பெண்கள் கரைவலை இழுப்பதில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீனவப் பெண் ரேவதி கூறியதாவது, இந்த கரைவலையில் மீன்பிடிப்போருக்கு பொறுத்த மட்டில் கூலி என்று கொடுக்க மாட்டார்கள். பங்கு என்றுதான் கொடுப்பார்கள். வலைக்காக ஒரு பங்கு... படகுக்கு ஒரு பங்கு... இவற்றில் கிடைக்கக்கூடிய மீன்களையோ அதன் வருமானங்களோ எத்தனை பேர் கரை வலையை இழுக்கிறோமோ அத்தனை பேருக்கும் பங்குகளாக பிரித்துக் கொள்வோம். எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற பிரிவுகள் எல்லாம் கிடையாது, என்றார்.

இதுகுறித்து மீனவர் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ கூறியதாவது, அரசு துறைகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும் மீனவ குடும்ப பெண்களுக்கு மாற்று தொழிலாக கடற்பாசி வளர்த்தல், தையல் பயிற்சி, மீன் ஊறுகாய் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றன. ஆனால் தனுஸ்கோடி மீனவப் பெண்களுக்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், பாரபட்சத்தினாலும் இத்திட்டங்களின் நன்மையினை தனுஸ்கோடி மீனவர்களால் முழுமையாக நுகர முடியாமல் உள்ளது. இந்த நிலை மாற மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x