Published : 08 Mar 2015 10:31 AM
Last Updated : 08 Mar 2015 10:31 AM
தமிழகத்தின் மின் தேவையை சமாளிப்பதற்காக 1000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற் கான ஒப்பந்தங்கள் ஏப்ரல் மாதத் துக்குள் இறுதி செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரி வித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப் பின் (சிஐஐ) தமிழக பிரிவு ஆண்டு விழாவையொட்டி ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ஐ முன்னெடுத்துச் செல்லும் வழி’ என்ற தலைப்பில் சென்னையில் மாநாடு நடந்தது. மாநாட்டைத் தொடங்கி வைத்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:
தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 13 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது. வரும் காலங்களில் தேவை மேலும் அதிகரிக்கும். இதை பூர்த்திசெய்யும் வகையில், 1000 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். அதன்மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழக அரசு உருவாக்கியுள்ள தொலைநோக்கு திட்டம் 2023-ல் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இலக்கை அடைவதற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2019-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் வட சென்னை அனல்மின் திட்டம் அலகு-3 மூலம் 800 மெகாவாட், உப்பூர் அனல்மின் திட்டம் மூலம் 1600 மெகாவாட், 2021-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் எண்ணூர் மாற்று அனல்மின் திட்டம் மூலம் 660 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதேபோன்று பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அலகில் இருந்து தமிழகத்துக்கு 460 மெகாவாட் அடுத்த ஆண்டு கிடைக்கும். வல்லூர் 3-வது அலகில் 305 மெகாவாட் இந்த ஆண்டு கிடைக்கும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மின்உற்பத்தி திட்டங்கள் மூலம் 2023-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கை தாண்டி, 20 ஆயிரத்து 250 மெகாவாட்டை எட்ட இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்
நிகழ்ச்சியில் தொழில்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சி.வி.சங்கர், சிஐஐ தமிழ்நாடு தலைவர் ரவி சாம், துணைத் தலைவர் எஸ்.என்.இசின்ஹோவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT