Published : 03 Mar 2015 09:14 AM
Last Updated : 03 Mar 2015 09:14 AM
அதிகரித்து வரும் பண மோசடிகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை, கல்லூரி சீட், வங்கிக் கடன் வாங்கித் தருவதாக, குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடி, ஏலச்சீட்டு, நிதி நிறுவனம் நடத்தி மோசடி… இப்படி பல்வேறு மோசடிகள் குறித்த புகார்கள் தினமும் வருகின்றன. 4 நாட்களுக்கு முன்புகூட, சென்னை குன்றத்தூரில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த முகமது ஜான் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 700 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பண மோசடிகள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்தும், தடுப்பதற்கான வழிகள் குறித்தும் போலீஸார், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடுமை இல்லாத சட்டங்கள்
மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதை காரணமாக கூறினாலும், சட்டங்கள் கடுமையாக இல்லாததுதான் முக்கிய காரணம். கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு அதில் சில லட்சங்களை செலவு செய்து ஜாமீன் வாங்கிக் கொள்கின்றனர். உதாரணத்துக்கு, ரூ.1 கோடி மோசடி செய்து, அதில் ரூ.30 லட்சத்தை வழக்குக்காக செலவு செய்கின்றனர். விடுதலையானதும் மீதிப் பணத்தை வைத்து சந்தோஷ மாக இருக்கின்றனர். மோசடி செய் பவர்கள் இதை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்’’ என்றார்.
சொத்துகள் பறிமுதல்
வழக்கறிஞர் துரை கூறியதாவது: நாட்டையே அதிர வைத்த முத்திரைத்தாள் மோசடியில் (ரூ.30 ஆயிரம் கோடி) குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை 7 ஆண்டு சிறை மட்டும்தான். மோசடி செய்யப்பட்ட பணமும் முழுமையாக பறிமுதல் செய்யப்படவில்லை. பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ரூ.1,500 கோடி மோசடி, ஒரு நிதி நிறுவனத்தின் ரூ.1,200 கோடி மோசடி போன்ற வழக்குகளில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை.
நடமாடும் நகைக் கடைபோல வலம் வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஒருவர், கடன் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி மோசடி செய்தார். சிறைக்கு சென்று வந்த அவர், மீண்டும் அதையே தொழிலாக செய்கிறார். இந்திய தண்டனைச் சட்டம் 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துகளை பறிமுதல்செய்து, அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் யாரும் அதைச் செய்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றவாளிகள் பட்டியலில்…
சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ‘‘மோசடி செய்யும் நபரின் சொத்துகளை பறிமுதல் செய்வ தோடு, அந்த நபரின் ரத்த சம்பந்தம் உள்ள அனைவரின் சொத்துக் களையும் பறிமுதல் செய்து பாதிக்க பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். மோசடிப் பேர்வழிகளுக்கு எந்த அரசியல் கட்சியும் அங்கீகாரம் அளிக் கக்கூடாது.
அவர்களது பெயர்களை குற்றவாளிகள் பதிவேட்டில் போலீஸார் பதிவுசெய்து, அனை வரும் தெரிந்துகொள்ளும் வகையில் பெரிதாக அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்றனர்.
வெளிநாடு செல்வோர் கவனத்துக்கு
வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். 044-22502267, 22505886 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். www.omcmanpower.com என்ற இணையதளம் மூலமாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ளலாம். தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களைப் பற்றி அருகில் இருக்கும் காவல் நிலையத்திலும் அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திலும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT