Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM
தருமபுரி தொகுதியை அன்புமணிக்காக ராமதாஸ் ரிசர்வ் செய்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லும் பாமக-வினர், அவர் போட்டியிடாவிட்டால் தருமபுரியில் யாருக்கு வாய்ப்பு என்று பட்டிமன்றமே நடத்திக் கொண்டி ருக்கிறார்கள்.
பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்களை படபடவென அறிவித்து விட்டார் ராமதாஸ். கிருஷ்ணகிரிக்கு மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, சேலத்துக்கு இளைஞர் அணி அருள், திருவண்ணாமலைக்கு எதிரொலி மணியன் என வேட் பாளர்களை வாசித்த ராமதாஸ், தருமபுரிக்கு மட்டும் வேட்பாளர் யார் என்று சொல்லவில்லை.
ஆனாலும், சமீபத்திய தருமபுரி மாவட்ட மேடைகளில் ராமதாஸ், ’’தருமபுரி தொகுதிக்கு பாமக வேட்பாளர் யார் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்கள்
மனதில் நினைத்து வைத்திருக் கும் அவரேதான் தருமபுரி வேட் பாளர்’’ என்று கூறி வந்தார். இந்நிலையில், ’அன்புமணி ராமதாஸ் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ என்று ஒரு பேச்சு கடந்த சில தினங்களாக பாமக வட்டாரத்தில் பரவியுள்ளது.
இதுகுறித்து பாமக முக்கி யப் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், ’’பாமக 10 தொகுதிகளை குறிவைத்து கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் சேர பத்துத் தொகுதி களோடு சேர்த்து மாநிலங்களவை சீட் ஒன்றும் தர வேண்டும் என பாமக தரப்பில் உறுதி கேட்கப்படுகிறது. இது கைகூடி வந்துவிட்டால் அன்புமணி மாநிலங்களவை எம்.பி.யாகிவிடுவார். ஏனெனில், அன்புமணி களமிறங்கும் முதல் தேர்தல் நெருப்பாறாக அமைந்து விடக் கூடாது என்கிற கவலை கட்சித் தலைமைக்கு உள்ளது. அன்புமணி தோற்றுப் போனால் அது பெரிய கவுரவ பிரச்சினையாகப் பார்க்கப்படும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தருமபுரி வேட்பாளரை ராமதாஸ் வெளிப் படையாக அறிவிக்கவில்லை. ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கி பாமக-வினரை ஓடியாடி கட்சிப் பணி செய்ய வைப்பதே ராமதாஸின் திட்டம்’’ என்று சொன்னார்.
முன்னாள் எம்.பி.க்கு வாய்ப்பு
இதனிடையே, அன்புமணி போட்டியிடாத பட்சத்தில் முன்னாள் எம்.பி.க்களான செந்தில், பாரிமோகன் இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன், மாவட்டச் செயலாளர்கள் சாந்தமூர்த்தி, அரசாங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி ஆகியோரும் தங்களுக்கு தருமபுரியில் களமிறங்கும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்று தவமிருப்பதாகச் சொல்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT