Published : 18 Mar 2015 09:31 AM
Last Updated : 18 Mar 2015 09:31 AM

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 26-ல் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப் 2 மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள் ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2013-14ம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு பணிகளில் 1,130 காலியிடங்களை நிரப்பும் வகையில் 2013 டிசம்பர் 1-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2014 நவம்பர் 8, 9-ம் தேதிகளில் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. அதில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5,635 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே 8-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாளில், குறித்த நேரத்தில் வராதவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது. அவர்கள் அடுத்தக்கட்டத்துக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

பணி நியமன கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ-வில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு மூலம் 2013-14ம் ஆண்டுக்கான உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு 346 பேர் பணி ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக கலந்தாய்வு மையத்தில் மார்ச் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது.

பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட வர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். டிஎன்பிஎஸ்சி பட்டியல் வரிசை எண் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கும்.

கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக மையத்துக்கு வரவேண்டும். டிஎன்பிஎஸ்சி வழங்கிய ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்று, இதர ஆவணங்களை தவறாமல் எடுத்துவர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x