Published : 15 Mar 2015 11:28 AM
Last Updated : 15 Mar 2015 11:28 AM

பரங்கிமலையில் பயிற்சி முடித்த 185 பேர் ராணுவத்தில் இணைந்தனர்

பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த 185 பேர் இந்திய ராணுவத்தில் நேற்று இணைந்தனர். முன்னதாக அவர்கள் நடத்திய ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 39 பெண்கள் உட்பட 185 பேர் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் அணி வகுப்பு நிகழ்ச்சி பரங்கிமலையில் நேற்று காலை நடந்தது. அணிவகுப்பு நிகழ்ச்சியில் லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் மதோக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார். பயிற்சியை முடித்த அனைவரும் இந்திய ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நடத்திய அணிவகுப்பு நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

பயிற்சியை நிறைவு செய்தவர் களில் சக்திகுமார் (சென்னை), மனோஜ் (ஈரோடு), ஞானசேகரன் (ஈரோடு), சுந்தரராஜன் (மதுரை), கிருஷ்ணமூர்த்தி (கோவை), பாலகீர்த்தி (கோவை), விக்னேஷ் (சென்னை), சுதா (வேலூர்), ஐஸ்வர்யா (நெல்லை) ஆகிய 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஆர்.சக்திகுமார் கூறும்போது, “என் பெற்றோர்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர். பி.இ பட்டதாரியான எனக்கு, சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேரும் ஆசை இருந்தது. இதற்காக கல்லூரியில் படிக்கும்போது என்சிசியில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டேன்” என்றார்.

மனோஜின் பெற்றோரான எஸ்.லோகுசாமி, விமலா ஆகியோர் கூறும்போது, “ஈரோடு அருகேவுள்ள சின்னியம்பாளையம்தான் எங்களது கிராமம். நாங்கள் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். மனோஜ் எங்களின் ஒரே மகன். எங்கள் தலைமுறையில் முதல் ஆளாக மனோஜ் இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றனர்.

நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூரை சேர்ந்த ஐஸ்வர்யா கூறும்போது, “எனது தந்தை மற்றும் சகோதரர்கள் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள். எனவே, நான் பள்ளியில் படிக்கும்போதே, ராணுவத்தில் சேர விரும்பினேன். பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்பதை நிருபிக்கும் வகையில் பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x