Published : 16 Mar 2015 10:35 AM
Last Updated : 16 Mar 2015 10:35 AM
இளநீரைக் குடிக்க இனி அரிவாளை நம்பியிருக்கத் தேவையில்லை. அதில் துளைபோட்டு, எளிதில் குடிக்கும் வகையிலான கையடக்கக் கருவியை தமிழகத்தில் அறிமுகப் படுத்தியுள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர்.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளதால், இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. சாலையோரங்களில் இளநீர் அடுக்கிவைக்கப்பட்டு பரபரப்பாய் விற்பனையாகின்றன. அரிவாளால் இளநீரை சீவி, அதில் ‘ஸ்ட்ரா’ போட்டுக் கொடுக்கின்றனர் இளநீர் விற்பனையாளர்கள்.
அனைத்துத் துறைகளிலும் நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், இளநீரை எளிதாகக் குடிப்பதற்கும் புதிய கருவி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அரிவாளுக்கு விடை கொடுக்கும் வகையிலும், சிறியவர் முதல் பெரியவர் வரை மிகச் சுலபமாக இளநீரைப் பருகும் வகையிலும் உள்ள இந்த கையடக்கக் கருவி கர்நாடக மாநிலம் புத்தூரில் உள்ள சாரதாம்பாள் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்தக் கருவியை திருச்சியில் 3 நாட்களாக நடைபெற்ற வேளாண் உயர்நிலை மாநாடு மற்றும் கண்காட்சியில், பெங்களூருவைச் சேர்ந்த ஜானகி ராமன் என்ற இளைஞர் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இந்த கையடக்கக் கருவி மூலம் இளநீரை எளிதாகக் குடைந்து, அதில் உள்ள நீரை ஸ்ட்ரா போட்டுக் குடிக்கலாம். மேலும் இளநீரில் துளையிட்டு அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டுவைத்து, ஏற்கெனவே துளைபோடும்போது கிடைத்த மட்டைப் பகுதியை கார்க் போல பயன்படுத்தி இளநீரை மூடிவைத்துவிடலாம். அடுத்த நாள் இந்த நீரைப் பருகலாம். இது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தி, குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
இதுகுறித்து ஜானகிராமன் கூறும்போது, “இந்தப் புதிய கருவி கர்நாடகத்தில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவியை நான் சந்தைப்படுத்தி வருகிறேன். தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் அறிமுகம் செய்துள்ளேன். இதன் விலை ரூ.185 என்றபோதிலும், வேளாண் கண்காட்சியில் ரூ.100-க்கு விற்பனை செய்தேன்.
இளநீரை வீட்டுக்கு வாங்கிச் செல்லும்போது, இனி அரிவாளைத் தேடிக் கொண்டிருக்கத் தேவை யில்லை. மேலும், அரிவாளைப் பயன்படுத்தி னால் காயம் ஏற்படுமோ என்ற அச்சமும் இருக்காது. புதிய கருவியைப் பயன்படுத்தி, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எளிதில் இளநீர் குடிக்கலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT