Published : 18 Mar 2015 10:31 AM
Last Updated : 18 Mar 2015 10:31 AM

மீனவ குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து 22-ம் தேதி ஆர்ப்பாட்டம்

கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையுள்ள மீனவ குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் அளித்த மாநகராட்சியைக் கண்டித்து கடலோர பகுதி மக்கள் 22-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

சென்னை மெரினா இணைப்பு சாலைத் திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள 2.2 கி.மீ. சாலையை ரூ.47.8 கோடி செலவில் அகலப்படுத்தும் திட்டம் கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள மீனவ குடியிருப்புகளை மார்ச் 27-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. சாலையின் மேற்கு பக்கத்தில் 12 அடிக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளையும் கிழக்கு பகுதியில் மணற்பரப்பில் உள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக மீனவ மக்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மீனவ மக்கள் முன்னணியின் தலைவர் ஜெ.கோசுமணி கூறும்போது, ‘‘இந்த சாலையில் காலையிலும் மாலையிலும் சில மணி நேரம் மட்டும் வாகனப் போக்குவரத்து திருப்பிவிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது எங்கள் வீடுகளை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். பாரம்பரியமாக இந்த குப்பங்களில் வாழும் எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பெரிய நிறுவனங்களின் கட்டிடங்களை இடிக்க வேண்டியது தானே’’ என்றார்.

கடல் அறக்கட்டளை இயக்கு நர் பி.ஆக்னஸ் கூறும்போது, ‘‘இத்திட்டத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். வரும் 22-ம் தேதி நவோ, கடலோர தேசிய பெண்கள் கூட்டமைப்பு, குடிசை வாழ்வோர் சங்கம், அறிவர் அம்பேத்கர் சுனாமி மகளிர் கூட்டமைப்பு, வாழ்க்கைச் சங்கம், கடல் ஆகிய அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்’’ என்றார்.

கடல்வள தகவல் மையத்தைச் சார்ந்த பூஜா குமாரிடம் கேட்டபோது, ‘‘இத்திட்டத்துக்கு ஒப்புதல் பெறும்போது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்’’ என கூறினார்.

‘‘இந்தப் பகுதியில் இருப்பவர்கள் சாலைகளிலேயே துணி துவைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்கின்றனர். இதனால், சாலை அடிக்கடி சேதமடைவதாக புகார் வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற 234 குடும்பங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேலும் பல குடும்பங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்’’ என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x