Published : 18 Mar 2015 09:28 AM
Last Updated : 18 Mar 2015 09:28 AM
ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் ஏ.அந்தோணி படோவராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வி.அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஆர்.பத்ரிநாராயணன், மாநில துணைத் தலைவர் எஸ்.மணிவாசகன், அமைப்புச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
14 ஆண்டுகள் முதல் நிலையில் பணிமுடித்த அனைத்து மின்னியல், இயந்திரவியல், பொதுவியல் இளநிலைப் பொறியாளர்களுக்கும், உதவிப் பொறியாளர்களுக்கு வழங்கியது போன்ற உதவி செயற் பொறியாளர் பதவிகள் வழங்க வேண்டும்.
தாமதப்படுத்தப்பட்டு வரும் இளநிலைப் பொறியாளர் இரண்டாம் நிலை, இளநிலைப் பொறியாளர் முதல் நிலை மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். நகர்ப்புறத்தில் வழங்கியது போன்றே வாரியத்திலுள்ள அனைத்து மின் விநியோக பிரிவுகளுக்கும் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பதவி வழங்க வேண்டும்.
அரசுத் துறைக்கு இணையான சம்பளத்தை வாரிய தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். ஊர் மாறுதல்கள், பதவி உயர்வுகளில் வாரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானமும் இயற்றப்பட்டது. இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT