Published : 13 Mar 2015 10:23 AM
Last Updated : 13 Mar 2015 10:23 AM

அரசு நடவடிக்கைகளால் தமிழகத்தில் வனப் பரப்பு அதிகரிப்பு: அமைச்சர் பெருமிதம்

அரசு எடுத்துவரும் நடவடிக்கை களால் தமிழகத்தில் வனப்பரப்பு அதிகரித்து வருகிறது என்று மாநில வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.

தமிழக வனத்துறை சார்பில் ‘மரம் வளர்ப்பில் நவீன தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. மாநில வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். மரம் வளர்ப்பு தொழில்நுட்ப கையேட்டை வெளி யிட்டு அவர் பேசியதாவது:

தேசிய வனக்கொள்கை 1988-ன் படி நாட்டின் மொத்த நிலப் பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதி யாக இருந்தால்தான் நாடு செழுமை யாக இருக்கும். தமிழகத்தில் கடந்த 2011-ல் வனப்பரப்பு அளவு 17 சதவீதமாக இருந்தது. 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை அடையும் நோக்கத்தில், ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அளவில் மரம் நடும் விழாக்கள் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.175 கோடியே 89 லட்சம் செலவில் 1 கோடியே 95 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு தமிழக வனப் பரப்பு அளவு 18.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகவலை டேராடூனில் உள்ள இந்திய வன நிலஅளவை நிறுவனம் வெளி யிட்டுள்ளது.

நவீன காலத்தில் வனப்பரப்பு குறைந்துவரும் நிலை யில் தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் வனப் பரப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இக்கருத்த ரங்கின் முடிவில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும். பின்னர் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) எஸ்.பாலாஜி கூறும்போது, ‘‘மரங்களை வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்பது, மரங் களை மதிப்புக்கூட்டு முறையில் மேம்படுத்துவது, சந்தைப் படுத்துவது, பூச்சிகளில் இருந்து பாதுகாப்பது,

அதன் மூலம் மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச்செய்வது போன்ற பல்வேறு தொழில்நுட்ப கருத்துகளை தெரிவிக்கும் நோக்கில் இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச் சூழல், வனத்துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வனத்துறை தலைவர் வினோத் குமார், தலைமை வனப் பாது காவலர் (ஆராய்ச்சி) மித்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x