Published : 12 Mar 2015 06:04 PM
Last Updated : 12 Mar 2015 06:04 PM

புதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

புதிய தலைமுறை சேனல் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய செயல் வன்முறை வெறியாட்டம் ஆகும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தின் முன் 8-ஆம் தேதி அன்று இந்துத்துவா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தொலைக்காட்சி அலுவலரைத் தாக்கியதோடு கேமராவையும் உடைத்தனர். கடந்த மூன்று நாட்களாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினரைத் தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் தொடர்ந்துள்ளது.

இந்தப் பின்னணியில், இன்று அதிகாலை வெடிகுண்டு வீசி உள்ளனர். இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது. ஜனநாயகத்தின் உயிர்த்தன்மை காக்கும் ஊடகங்களையும், செய்தி ஏடுகளையும் தாக்குகின்ற வன்செயல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துத்துவா சக்திகளின் பாசிச கோர முகம் அம்பலமாகிவிட்டது.

இந்த வன்முறைச் செயலைப் பின்னணியில் இருந்து இயக்கும் பாசிச இந்துத்துவா சக்திகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x