Published : 31 Mar 2015 09:11 AM
Last Updated : 31 Mar 2015 09:11 AM

ஐஆர்என்எஸ்எஸ்-1டி: செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் பணி வெற்றி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்கான முதல்கட்ட பணி வெற்றி பெற்றுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில் ஏற்கெனவே 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 4-வதாக ஐஆர்என்எஸ்எஸ்-1டி என்ற செயற்கைக்கோள் கடந்த 28-ம் தேதி மாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், திசை அறிதல் உள்ளிட்ட ஜிபிஎஸ் பணிகளை இது மேற்கொள்ளும்.

இந்நிலையில், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத் தில், ‘‘ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்கான முதல் கட்ட பணிகள் வெற்றி பெற்றுள்ளன. செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருந்த அப்போஜீமோட்டார் 29-ம் தேதி மாலை 5.28 மணி அளவில் செயற்கைக்கோளில் இருந்து விடுபட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவலை இஸ்ரோ அதிகாரிகளும் நேற்று உறுதிப்படுத்தினர்.

ஐஆர்என்எஸ்எஸ்-1இ, 1எஃப், 1ஜி ஆகிய செயற்கைக் கோள்களை இந்த நிதியாண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x