Published : 05 Mar 2015 03:11 PM
Last Updated : 05 Mar 2015 03:11 PM
2011ஆம் ஆண்டில் செய்த தவறுக்கு பரிகாரம் காணும் வகையில் அதிமுக அரசை வீழ்த்தும் நாளுக்காக மக்கள் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜெயலலிதா, அந்த வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும் என்று வேண்டி மதுரையில் மிகப்பெரிய அளவில் சண்டியாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இதை தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் முன்னின்று நடத்தியுள்ளனர்.
உலக வரலாற்றில் முதல் முறை
ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். அதன் பின்னர் அரங்கேற்றப்படும் நாடகங்கள் மற்றும் கூத்துக்கள் உலக அரங்கில் தமிழகத்தை கேலிப் பொருளாக்கியுள்ளன.
உலக வரலாற்றிலேயே முதல் முறையாக முதலமைச்சரும், அமைச்சர்களும் போட்டிப்போட்டு அழுதுகொண்டே பதவியேற்ற அவலம் தமிழகத்தில் தான் நடைபெற்றது. அதன்பின் இன்று வரை அமைச்சர்களின் முக்கியப் பணியாக இருப்பது மாநிலம் முழுக்க உள்ள கோவில்களுக்கு சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டி சிறப்பு பூஜைகளை நடத்துவது, தங்கத் தேர் இழுப்பது, மண் சோறு சாப்பிடுவது போன்றவற்றை செய்வது மட்டும்தான். ஆட்சியில் அமர்த்திய மக்களின் நலனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்பதை தமிழகத்தின் முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும் மறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. மக்கள் பணியை மறந்த முதல்வர் மற்றும் அமைச்சர்களின் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதன் உச்சகட்டமாகத் தான் ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்காக மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் சண்டியாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த யாகத்தை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு மற்றும் ஏராளமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். ஒரே இடத்தில் 108 ஓம குண்டங்களை அமைத்து பிரமாண்டமான முறையில் சண்டி யாகம் நடத்தினால், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்று இதற்கு விளக்கம் வேறு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த யாகத்தை நடத்தியவர்களின் விருப்பங்களும், ஆசைகளும் என்னவாக இருந்தன என்பது ஒருபுறமிருக்க, இதைத் தவிர முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் வேறு வேலையே இல்லையா? என்பது தான் மக்களின் வினா.
ஊழல் குற்றவாளியைக் காப்பாற்ற யாகம்
தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்று 5 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இன்று வரை எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை; புதிதாக எந்த திட்டங்களையும் தொடங்கி வைக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பெரியகுளத்தில் 104 இணையர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் விழாவிலும், ஜெயலலிதாவை காப்பாற்றுவதற்கான இந்த யாகத்திலும் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.
14ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு பல்லாயிரம் கோடி குறைக்கப்பட்டிருக்கிறது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகம் முயன்று வருகிறது, பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது, நிதியமைச்சர் என்ற முறையில் அடுத்த 3 வாரங்களில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என எண்ணற்ற பணிகள் காத்திருக்கும் நிலையில் அதையெல்லாம் விட்டு விட்டு ஊழல் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக யாகம் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வரை பெற்றதற்காக தமிழக மக்கள் தங்களைத் தாங்களே நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இன்னொரு பக்கம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி அதை தீர்ப்பதற்கு முயலாமல், ஜெயலலிதாவை காப்பாற்ற தீச்சட்டி தூக்கிக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக் கொள்ளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதுபோன்ற மூடநம்பிக்கையை பரப்பும் செயல்களில் ஈடுபடுவது ஒரு புறமிருக்க, ஊழல் குற்றத்திலிருந்து தப்பிக்க கடவுளையும் கூட்டணிக்கு அழைப்பதை நினைத்து அழுவதா...சிரிப்பதா? என்று தெரியவில்லை.
ஊழலில் மட்டும் திறமையானவர் ஜெயலலிதா
ஜெயலலிதா தான் நிர்வாகத் திறமை மிக்கவர் என்ற பிம்பம் ஊடகங்களின் உதவியுடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால், ஊழலில் மட்டும் தான் அவர் திறமையானவர் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவரது வழியில் வழியில் நடக்கும் இப்போதைய ஆட்சியில் நிர்வாகமே முடங்கிக் கிடக்கிறது. இதையெல்லாம் உணராமல் ஜெயலலிதாவை மகிழ்விக்கும் நோக்குடன் யாகம், பூஜை என தினமும் ஒரு நாடகத்தை மட்டும் அரங்கேற்றுவதை ஆட்சியாளர்கள் வாடிக்கையாக்கிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்; 2011 ஆம் ஆண்டில் செய்த தவறுக்கு பரிகாரம் காணும் வகையில் இந்த அரசை வீழ்த்தும் நாளுக்காக மக்கள் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT