Published : 30 Mar 2015 12:06 PM
Last Updated : 30 Mar 2015 12:06 PM

திருவாரூரில் பலியான தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: கருணாநிதி வலியுறுத்தல்

திருவாரூரில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவாரூர் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மத்தியப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்குவதற்காக நன்னிலம் அருகே நாகக் குடி என்ற கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அங்கே குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்டுமானப் பணிகளில் நமது மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், மற்றும் மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வரு கிறார்கள்.

நேற்றையதினம் (29-3-2015) ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் மேற்கூரைக்கான காங்க்ரீட் போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதி திடீரென சரிந்து விழுந்ததில், அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு பெரும்பாலானவர்களை மீட்ட போதிலும், ஐந்து பேர் சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி கலைவாணன், மற்றும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே சென்று மீட்பு பணியிலே ஈடுபட்டதாகத் தொலைபேசியில் தெரிவித்தார்கள். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்களாம். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தின் உயிரிழந்த ஐந்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அந்தத் தொகுதி யின் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய மாநில அரசுகள் இறந்தவர்களின் குடும் பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்தவர்களுக்கு அவர்களின் பாதிப்புக்கு உகந்தவாறும் உடனடியாக நிவாரணமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x