Published : 30 Apr 2014 12:00 AM
Last Updated : 30 Apr 2014 12:00 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்க முயற்சிப்பதாகக் கூறி, ‘லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ்’ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் 3 வார கால தடைக்குப் பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலும் தனித் தனியே நேற்று விசாரணைக்கு வந்தன.
ரூ.1 லட்சம் அபராதம்
கடந்த மார்ச் 14-ம் தேதி லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறை யீட்டு மனு, நீதிபதி சத்ய நாராயணா முன் விசாரணைக்கு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜெய்குமார் பாட்டீல் வாதிடுகையில், “ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள எங்கள் நிறுவனத்தின் சொத்துகளை உடனே விடுவிக்க வேண்டும். எங்கள் மனு மீதான தீர்ப்பு வரும்வரை சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும்” என்றார். இதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி சத்யநாராயணா, “லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் தாக்கல் செய்த இந்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. மேலும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. சொத்துக்குவிப்பு வழக்கை நிறுத்தக் கோரும் இந்த மனு உள்நோக்கம் கொண்டது. மீண்டும் மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்க முயற்சிப்பதால், அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.
10-வது நாளாக இறுதி வாதம்
இதனிடையே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலும் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மெடோ அக்ரோ ஃபார்ம், ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம், சசி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் சார்பில் 18 புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
அந்த மனுக்களில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெய லலிதா உள்ளிட்ட நால் வரும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மட்டுமே. எனவே எங்கள் நிறுவனங்களின் சொத்துகளை விடுவிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள் ளது. இந்த 18 புதிய மனுக் களையும் நீதிபதி டி'குன்ஹா விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கின் இடையிடையே புதிய மனுக்களும் விசாரிக்கப்படும்” என்றார்.
இதனிடையே மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநர்கள் குமார், கண்ணன், கணேசன் ஆகியோரிடம் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அரசு வழக்கறிஞர் பவானி சிங் 10-வது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் 209-வது அரசுத் தரப்பு சாட்சியான அபிராமபுரம் இந்தியன் வங்கியின் மேலாளர் மாணிக்கவாசகன் அளித்த வாக்குமூலத்தை அடிப்படை யாக வைத்து வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து வழக்கை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதிவாதத்தை இன்றும் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT