Published : 12 Apr 2014 10:34 AM
Last Updated : 12 Apr 2014 10:34 AM
நகைக்காக மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை அடையாறு இந்திரா நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகனரங்கம் (38). இவரது மனைவி கற்பகவள்ளி (35). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்துக்கு பிறகு கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கற்பகவள்ளியை அடித்து உதைத்தார் மோகனரங்கம். இதில் படுகாயம் அடைந்த கற்பகவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, மோகனரங்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு, அசோக் நகர் 5-வது அவென்யூ 16-வது தெரு வில் உள்ள பெற்றோர் வீட்டில் கற்பகவள்ளி வசித்து வந்தார். சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த மோகனரங்கம், கற்பகவள்ளியிடம் மன்னிப்பு கேட்க கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகனரங்கம் கட்டையால் கற்பக வள்ளியின் தலையில் தாக்கினார். பின்னர் கத்தியால் கழுத்து, மார்பு பகுதிகளில் குத்தினார். இதில் கற்பகவள்ளி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவான்மியூர் போலீஸார் மோகனரங்கத்தை கைது செய்தனர்.
காவல் துறையினர் கூறும்போது, "திருமணத் தின் போது வரதட்சணையாக கொடுக்கப்பட்ட 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணத்தை மோகனரங்கம் ஊதாரித் தனமாக செலவு செய்திருக்கிறார். கடைசியில் மீதமிருந்த 10 சவரன் நகைகளையும் கேட்டு கற்பகவள்ளியை கொடுமை செய்திருக்கிறார். அடிக்கடி கற்பக வள்ளியின் பெற்றோரிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். நகைகளை கற்பகவள்ளி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார் " என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT