Last Updated : 17 Mar, 2015 09:23 AM

 

Published : 17 Mar 2015 09:23 AM
Last Updated : 17 Mar 2015 09:23 AM

தமிழகம் முழுவதும் கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் 140 அம்மா உணவகங்கள்

நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட துறைகள் மூலம் அம்மா உணவகத்துக்கான பொருட்களை, மானிய விலையில் அளிக்க அரசு உத்தரவிடாமல் உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணி முடிந்தும், ஏறத்தாழ 140 அம்மா உணவகங்கள் திறப்பு விழாவுக்காக தவமிருக்கின்றன.

கடந்த 2013 மார்ச் 19-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெய லலிதா சென்னை-சாந்தோமில் மலிவு விலை உணவகத்தை தொடக்கிவைத்தார். இந்த உண வகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் மலிவு விலை உணவகம் விரிவுப்படுத்தப்பட்டு, மொத்தம் 200 உணவகங்கள் தொடங்கப்பட்டன. இதேபோல, மற்ற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிபடுத்தப்படுமென சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மலிவு விலை உணவகமாக செயல்பட தொடங்கிய இந்த உணவகம் தமிழக அரசின் அம்மா உண வகம் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகள் என தமிழகம் முழுவதும் 294 அம்மா உணவகங்கள் செயல் பட்டு வருகின்றன. அம்மா உணவகங்கள் நிறுவப்படாத மாநகராட்சிகள், மாவட்டத் தலை நகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள் உள்பட மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்கள் திறக்க கடந்த ஆண்டு முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகள், நகராட்சிகளில் அம்மா உணவகத்துக்கான கட்டு மானப் பணிகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களின் கட்டுமானப் பணி முடிவடைந்தது. மேலும், பல நகராட்சிகளில் கட்டு மானப் பணி நடந்து வருகிறது.

பூட்டப்பட்டுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுக்கு பின், அம்மா உணவகம் திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந் தனர். ஆனால், தேர்தல் முடிந்து ஆளும்கட்சி அமோக வெற்றி பெற்றும், மாநிலம் முழுவதும் அம்மா உணவகம் திறக்கப்படாமல் உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட உண வகங்கள் பூட்டுப் போடப்பட்டு பார்வையாளர்களுக்கான காட்சி யகமாக விளங்கி வருகிறது.

அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்க பல்வேறு அரசு துறைகள் மூலம் உணவு பொருட்கள் பெறப்படு கிறது. நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரையும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மளிகைப் பொருட் கள், ஆவின் மூலம் பால் பொருட் கள் பெறப்படுகின்றன. புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா உணவகங் களுக்கு தேவைப்படும் உணவு பொருட்கள் மலிவு விலையில் அளிக்க அரசு உத்தரவிட வேண்டும். மானிய விலையில் உணவு பொருள் வழங்க இத்துறைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்காத நிலையில், அம்மா உணவகம் திறப்பு விழா காலதாமதமாகி வருவது தெரிய வந்துள்ளது.

சேலம் அரசு மோகன்குமார மங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி மூலம் பிரம்மாண்டமான முறையில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், உணவகம் திறக்கப்படாமல் உள்ளதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் உணவுக்காக வெளியிடங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x