Published : 13 Mar 2015 10:24 PM
Last Updated : 13 Mar 2015 10:24 PM
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அதிகாலையில் கைது செய்து சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் ஜி.ரவிக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சட்டத்துக்குப் புறம்பாக சாலைகளில், பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதால் அதை அகற்றும் முயற்சியில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஈடுபட்டார். புரசைவாக்கத்தில் அதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது அவ்வழியே வந்த வீரமணிக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வீரமணி அளித்த புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராபிக் ராமசாமியைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
82 வயதாகும் டிராபிக் ராமசாமிக்கு சிறுநீரகத்தில் கிருமித் தொற்று இருப்பதால், அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். அவரது பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவித்த கருத்து மற்றும் உத்தரவு வருமாறு:
டிராபிக் ராமசாமி சாலையில் இருந்த பேனரை கிழித்தது தவறான செயல்தான். அதற்காக அவரை அதிகாலையில் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? அதிகாலையில் அவரைக் கைது செய்ததை நியாயப்படுத்த முடியாது. அதனால் அரசு தரப்பில் மேலும் ஒரு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், அதிகாலையில் அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணங்களைக் குறிப்பிட வேண்டும். டிராபிக் ராமசாமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடனடியாக அரசு பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT