Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM

பாஜக கூட்டணியை ரஜினி ஆதரிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தர்ராஜன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த் போன்ற நடுநிலையாளர்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டார்.

சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

நாடாளுமன்றத் தேர்தலில், ஊழலுக்கு எதிராகவும் வளர்ச்சியை மையப்படுத்தியும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பாஜக தவிர வேறு எந்தக் கட்சியும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. அவற்றுக்கு அந்தத் தகுதியும் இல்லை. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்யும்போது, “தவறு செய்திருந்தால் தலையில் குட்டுங்கள். சிவகங்கையிலேயே தங்கியிருந்து மக்கள் பணியாற்ற விரும்புகிறேன்” என்று சொல்லி வருகிறார். இனிமேல் டெல்லியில் அவருக்கு வேலை இருக்காது.

தமிழகத்தில் பல திட்டங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை. அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருந்துவமனையில் மருந்துகள் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்கிறார் ஜெயலலிதா.

நதிகளை இணைத்தால்தான் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். முந்தைய பாஜக ஆட்சியில், நதிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டதும் அதற்கு நிதி உதவி அளித்து முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். 1996-ம் ஆண்டு தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலில், அப்போதைய ஆட்சி அகற்றப்படாவிட்டால் மக்களை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். அதுபோல, இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றாவிட்டால், நாட்டு மக்களை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று அவர் குரல் கொடுக்க வேண்டும்.

ரஜினியை போன்ற நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள், நடுநிலையாளர்கள், நதிகள் இணைப்பு உள்ளிட்ட நல்ல திட்டங்கள் வர வேண்டும், நாடு காப்பாற்றப்பட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளுக்காக பல தொகுதிகளை பாஜக விட்டுக் கொடுக்க நேரிட்டது. அதனால்தான், பாஜக மகளிருக்கு தகுதி இருந்தும் தொகுதி கிடைக்கவில்லை. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இன்னும் 2 வாரத்தில் தமிழகத்துக்கு வருவார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x