Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM

வீட்டுக்குள் மாற்றுத் திறனாளிகள் முடங்கி இருக்கக் கூடாது: சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு

மாற்றுத் திறனாளிகள் தங்களது திறமைகளை வெளி உலகுக்கு காட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கக் கூடாது என்று கோ-ஆப்டெக்ஸ் செயல் இயக்குநர் சகாயம் கூறினார். தமிழ்நாடு மாற்றுத் திறனாளி கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை பேரவை சார்பில் சமூகப் பாதுகாப்புக்கான 14-வது மாநில மாநாடு சென்னையில் நடந்தது.

அமைப்பின் மாநில தலைவர் எம்.லலிதாம்பிகை, செயலாளர் டி.மகேஸ்வரி தலைமையில் நடந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கோ-ஆப்டெக்ஸ் செயல் இயக்குநர் சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது மாற்றுத் திறனாளிகளுக்காக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அந்த மையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் யாரும் குறைபாட்டுடன் முடங்கி இருக்கக் கூடாது. குறிப்பாகப் பெண் மாற்றுத் திறனாளிகள் தைரியமாக இருக்க வேண்டும். உடல் நிலையைப் பொருட்படுத்தாது மன தைரியத்துடன் செயல்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தங்களது திறமைகளை வெளி உலகுக்கு காட்டவேண்டும். இவ்வாறு சகாயம் கூறினார்.

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அரசு சலுகைகள் மறுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அரசு சலுகைகள் மறுக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு சங்கத்தின் சார்பில் தையல் இயந்திரங்களை சகாயம் வழங்கினார்.

9 கோரிக்கைகள் வலியுறுத்தல்

‘வீடு இல்லாத மாற்றுத்திறன் பெண்களுக்கு வீடு வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கி வரும் ரூ.1000 உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பேருந்து நிலையங்கள் உள்பட அனைத்துப் பொதுஇடங்க ளிலும் மாற்றுத்திறன் பெண்கள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் வசதியுடன் கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்’ என்பது உள்பட 9 கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x