Last Updated : 04 Apr, 2014 12:44 PM

 

Published : 04 Apr 2014 12:44 PM
Last Updated : 04 Apr 2014 12:44 PM

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக தமிழகத்துக்கு மேலும் 3500 துணை ராணுவ வீரர்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும்3,500 துணை ராணுவத்தினர் அடுத்த மாதம் 20-ம் தேதி வருகிறார்கள்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில், தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக வியாழக்கிழமையன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தேர்தல் ஐ.ஜி.க்கள் சேஷசாயி, டி.கே.ராஜேந்திரன் மற்றும் சிறப்புத் தலைமை தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில், தேர்தலில் எந்தெந்த தொகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

வாகனச் சோதனைக்கு மத்திய படை

இது குறித்து தேர்தல் துறை யினர், `தி இந்து' விடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக தமிழகத்துக்கு ஏற்கெனவே 18 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளார்கள். அவர்கள் பறக்கும் படையினருடன் சென்று வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சில இடங்கள் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமாக, மது விற்ற புகாரின் பேரில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, தமிழகத்துக்கு மேலும் 32 கம்பெனி துணை ராணுவத்தினர், ஏப்ரல் 20-ம் தேதி வருகிறார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கம்பெனியில் சுமார் 100 முதல் 110 பேர் வரை இருப்பார்கள்.

தமிழகத்தில் உள்ள ‘கவனிக்கத்தக்க’ (கிரிட்டிகல்) தொகுதிகளைக் கணக்கிடும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இவற்றில், உத்தேசமாக 9,200 வாக்குச்சாவடிகள் ‘கிரிட்டிகல்’ என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய பொதுப் பார்வையாளர்கள் அந்த பட்டியலை ஆய்வு செய்தபின்னரே அது பற்றிய முடிவெடுக்கப்படும். பொதுப்பார்வையாளர்கள் 5-ம் தேதி வருகிறார்கள். எனினும், சிலர் ஏற்கெனவே வந்துவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமைச்சர்களுக்கு பாதுகாப்பு?

இதற்கிடையே, தமிழகத்தில் எந்த அமைச்சருக்கும் பிரத்தியேக பாதுகாப்பு தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி காவல்துறை வட்டார்கங்கள் வியாழக்கிழமை கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தமிழக அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மாநில போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், இவ்வாறு பாதுகாப்பு வாபஸ் பெறப்படும்போது, சிலருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், அதுபோன்றவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்க டிஜிபி தலைமையிலான ஒரு குழு முடிவெடுக்கும்.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழு, இங்குள்ள அமைச்சர்கள் யாருக்கும் பெரிய அளவில் அச்சுறுத்தல் இல்லை என்பதால் சிறப்புப் பாதுகாப்பு தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய படை பாதுகாப்பு மட்டும் தொடரும்.`

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x