Published : 16 Feb 2014 01:20 PM
Last Updated : 16 Feb 2014 01:20 PM
திருநெல்வேலியில் ஞாயிற்றுக் கிழமை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டை நடத்துகிறார் சரத்குமார். இதன் பின்னணியில் உள்ள அரசியல் சூட்சுமத்தை பார்த்து அதிமுகவினரே ஆச்சரியப்படுகின்றனர்.
அதிமுக-வினரே கூச்சப்படும் அளவுக்கு அதிமுக அரசை வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார் சரத்குமார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து இரண்டு தொகுதிகளைப் பெற்று, இரண்டிலும் வெற்றி பெற்றது அஇசமக. நாடாளுமன்றத் தேர்தலிலும் தனது கட்சியின் ஆதரவு அதிமுக-வுக்கே என்ற முடிவை எடுத்திருக்கும் சரத்குமார் தேர்தல் நேரத்தில் நெல்லையில் அரசியல் மாநாட்டை கூட்டியிருக்கிறார்.
இதுகுறித்து நெல்லை அஇசமக வட்டாரத்தில் நம்மிடம் பேசியவர்கள், ’’திமுக தரப்பில் கனிமொழிக்கு ஆதரவாக நாடார் இனப் பிரமுகர்கள் சிலர் படைதிரண்டு நிற்கின்றனர். இனப் பாசத்துடன் இவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசி வரு கிறார் கனிமொழி. இதனால் தென் மாவட்டங்களில் குறிப்பாக நாடார் சமூகத்து மக்கள் மத்தியில் திமுக-வுக்கு பலம் சேர்க்க ரகசிய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதைத் தெரிந்து கொண்டுதான் அண்மையில், மூன்று மாநிலங்களவை உறுப் பினர் பதவிகளை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கே வழங்கினார் ஜெயலலிதா. இந்நிலையில் நாடார் சமூகத்து மக்களுக்கு அதிமுக கூட்டணி மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவே நெல்லையில் மாநாட்டை கூட்டுகிறார் சரத்குமார்’’ என்கின்றனர்.
அஇசமக-வின் நெருக்கமானவர் களோ, ’’நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் அஇசமக-வின் அரசியல் ஆலோசகரான ராதிகா சரத்குமாரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வாய்ப்பு கேட்கப்பட்டது.
ஆனால், அந்தக் கோரிக்கையை அதிமுக தரப்பில் நிராகரித்துவிட்டனர். இந்தச் சூழலில் நெல்லையில் மாநாடு நடத்தி, தனக்கு உள்ள செல்வாக்கை நிலைநிறுத்திக் காட்டி அதிமுக-விடம் சரத்குமார் மீண்டும் அப்பீல் போடத் திட்டமிடுவதுபோல் தெரிகிறது’’ என்று சொல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT