Published : 29 Apr 2014 08:30 AM
Last Updated : 29 Apr 2014 08:30 AM
சென்னையில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்குத் தீர்வு காணவும், புதிதாக 4 துணை மின்நிலையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி செலவில் நிறுவப்படவுள்ள இந்த துணை மின் நிலையங்களுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவியை ஜப்பான் அரசு வழங்குகிறது. புளியந்தோப்பில் மேலும் ஒரு புதிய மின்நிலையம் நிறுவப்படுகிறது.
சென்னையில் மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் ஒரு நாளைய மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட் ஆகும். அதில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக (3 ஆயிரம் மெ.வா.) சென்னை மாநக ருக்கு ஒதுக்கப்படுகிறது. சென்னை மின் பிரிவு, இரண்டு மண்டலங் களாக பிரிக்கப்பட்டு, சுமார் 27 லட்சம் மின் இணைப்புகளுக்கு, 168 துணை மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனாலும், பல இடங்களில் மின் வெட்டு அமலில் இல்லாத நேரத்திலும், மின் விநியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பெரம்பூர், கொளத்தூர் பகுதியில் நள்ளிரவில் மின்வெட்டு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் வாரிய விநியோகத்துறை பொறியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கூடுதலாக துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்கள்) அமைப்பதாலும், பழுதான மின் இணைப்புப் பெட்டிகளை மாற்றுவதாலும் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணமுடியும் எனத் தெரியவந்தது.
மேலும் வல்லூர் புதிய மின் அலகு மற்றும் வட சென்னை நிலைய விரிவாக்க புதிய அலகிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளதால், அங்கிருந்து மின்சாரத்தை விநியோகிக்கவும், புதிய துணை மின் நிலையம் தேவைப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் மணலி, கொரட்டூர், கிண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் தலா 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையங்களை அமைக்க, மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடியிலான இத்திட்டத்துக்கு, ரூ.3,500 கோடி நிதியுதவியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதியம் (ஜைகா) அளிக்கிறது.
மீதத்தொகையை தமிழக அரசு ஏற்கிறது. இதுதவிர, மின்வாரிய செலவில் சென்னை புளியந்தோப்பில் 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட மேலும் ஒரு புதிய துணை மின் நிலையமும் அமையவுள்ளது.
மேற்கண்ட 5 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டால், நுகர்வோருக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படும் வழியில் வீணாக விரயம் ஆவது பெரிதும் தவிர்க்கப்படும். நகரில் மின் விநியோகமும் ஏற்ற இறக்கமின்றி சீராக இருக்கும். இவற்றை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கிவிட்டன. இன் னும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் அவை நிறுவப்படும். அதன்பிறகு, சென்னையின் மின்தேவை பெருமளவில் பூர்த்தியாகும் என்று மின்வாரியம் உறுதியாக கூறுகிறது.
மேலும், வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தெருவோர மின் இணைப்புப் பெட்டிகள் சேதமாகியிருப்பதால் அடிக்கடி ப்யூஸ் போவதைத் தொடர்ந்து, 2,400 இடங்களில் புதிய மின் இணைப்புப் பெட்டிகள் அமைக்கவும் மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT