Published : 02 Feb 2015 03:38 PM
Last Updated : 02 Feb 2015 03:38 PM

29 ஆண்டுகளாக போலியோ விழிப்புணர்வு பிரச்சாரம்: பொதுச் சேவையில் திருச்சி ரயில்வே ஊழியர்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரிந்து வருபவர் சீனிவாச பிரசாத் (53). ஒவ்வொரு முறையும் போலியோ சொட்டு மருந்து புகட்டும் நாளில், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நடந்தே சென்று, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

29 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தச் சேவையில் ஈடுபடுட்டு வரும் சீனிவாச பிரசாத், மாணவப் பருவத்தில் தேசிய மாணவர் படையில் இருந்ததால், ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்த பின்னர், திருச்சி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முதலுதவி அளிப்பதற்கான சான்றிதழ் பெற்றார்.

போலியோ ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மட்டுமன்றி, சாலை விபத்து மற்றும் பேரிடர்களில் சிக்குவோருக்கு முதலுதவி செய்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுவரை பல்வேறு விபத்துகளில் சிக்கிய பலரை சீனிவாச பிரசாத் காப்பாற்றியுள்ளார்.

கோயில் விழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், முதலுதவி அளிக்கத் தயாராக இருப்பதாகவும் மெகா போனில் உரக்க அறிவித்துக்கொண்டே செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நிகழாண்டு, முதற் கட்டமாக ஜன. 18-ம் தேதி போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெற்றபோது திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தனது சேவை குறித்து சீனிவாச பிரசாத் பேசும்போது:

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு வந்து 29 ஆண்டுகளாகிவிட்டது. இப்போது போலியோ குறித்து தாய்மார்களிடையே நல்ல விழிப்புணர்வு இருக்கிறது. அவர்களே ஆர்வத்துடன் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மையத்துக்கு வருகின்றனர். ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன் நிலைமை இப்படி இல்லை. வீடு வீடாகச் சென்று போலியோ பாதிப்பு மற்றும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டுவதால் ஏற்படும் நன்மை குறித்து பேசிப் பேசி, குழந்தைகளுடன் பெண்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரவழைக்கும் நிலைதான் இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகள் எனக்குத் தெரியும். வடமாநிலத்தினர் வசிக்கும் பகுதியில் ஹிந்தியில் பிரச்சாரம் செய்வேன்.

அதேபோல, தற்போது வாகன விபத்துகளும் அதிகரித்துவிட்டன. சாலை விபத்து, தீ விபத்து, இயற்கை சீற்றம் எதுவானாலும், அங்கு நான் உடனே சென்று முதலுதவி செய்யத் தொடங்கிவிடுவேன். நான் முதலுதவி சேவை அளிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் இந்தளவுக்கு வாகனப் போக்குவரத்து இல்லை. எப்போதாவது ஒன்றிரண்டு விபத்து நடக்கும். தகவல் கிடைத்தவுடன் நான் உடனே அங்கு சென்றுவிடுவேன். ஆனால், இப்பொதெல்லாம் நான்குவழிச் சாலையில் நாள்தோறும் நடக்கும் விபத்து குறித்த செய்திகளைப் பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது.

நல்லவேளையாக, 108 ஆம்புலன்ஸ் சேவை ரொம்பவே பயன்படுகிறது என்ற அவரை, முதலுதவி மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு ரயில்வே உயரதிகாரிகள் தடை செய்ததில்லையாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x