Published : 27 Feb 2015 10:43 AM
Last Updated : 27 Feb 2015 10:43 AM
பள்ளி குழந்தைகளின் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்த மாவட்ட மைய நூலகங்களில் உறுப்பினராக சேரும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது.
தமிழகத்தில் 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 ஊர்ப்புற நூலகங்கள், 10 நடமாடும் நூலகங்கள், 539 பகுதி நேர நூலகங்கள் செயல்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம், 62 கிளை நூலகங்கள், 87 ஊர்ப்புற நூலகங் கள், 24 பகுதி நேர நூலகங்கள் செயல்படுகின்றன. இந்த நூலகங் களில் பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்களுடைய வாசிப்பு திறனை உயர்த்த, பிரத்தியேக வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கண் பார்வையற்றவர்கள், கை, கால் ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களும் நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிக்கும் வகையில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான நூலகப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அதனால், தற்போது அனைத்து தரப்பினரும் நூலகங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். புத்தக வாசிப்பும் பரவலாகி வருகிறது.
இந்நிலையில் பள்ளி குழந்தைகளை நூலகத்துக்கு வர வைக்கவும், அவர்களுடைய வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தவும் மாவட்ட மைய நூலகங்களில் உறுப்பினராக சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு பொது நூலகத் துறை சார்பில் விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நூலக அதிகாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘அனைத்து தரப்பினரிட மும் வாசிப்பை ஊக்கப்படுத்தவும், புத்தகங்களை எளிமையாக கையா ளும் நோக்கிலும் நூலகங்களை தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நவீனப்படுத்தி வருகிறது.
படிப்பில் முழு நேரமும் மூழ்கி கிடக்கும் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, முதற்கட்டமாக அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் உறுப்பினராக சேரும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேருக்கு தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை டிக்ஸ்னரி, ஜாமண்டரி பாக்ஸ், அட்லஸ் மேப், பேனா உள்பட 10 கல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி இறுதி தேர்வுக் காக மாணவர்கள் தயாராகி வருவதால் இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை. விரைவில் தமிழக அரசு ஒப்புதல் கிடைத்ததும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், ஆட்சியர்கள், கல்வித்துறை அதிகாரி களை கொண்டு இந்த திட்டம் தொடங் கப்படும். மாணவர்கள், உறுப்பினராக சேர ரூ.30 ரூபாய் முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். தொடர்ந்து ஆண்டுக்கு 10 ரூபாய் சந்தா கட்ட வேண்டும். அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT