Published : 23 Feb 2015 11:44 AM
Last Updated : 23 Feb 2015 11:44 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தொடர்ந்து நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதால், கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
2011-ல், சென்னை மாநகராட்சி யுடன் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் இணைக்கப்பட் டன. இதனால், 174 சதுர கி.மீ. பரப்பளவாக இருந்த சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ. ஆக விரிவடைந்தது. இந்த விரிவடைந்த சென்னை மாநகராட்சிப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை, சென்னையை ஒட்டி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் நிறைவு செய்து வருகின்றன.
தற்போது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. 2014, பிப். 21 நிலவரப்படி மொத்தம் 11,057 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில், நீர் இருப்பு 3, 543 மில்லியன் கன அடியாக இருந்தது. ஆனால், நிகழாண்டு பிப். 21-ல் 2,919 மில்லியன் கன அடியாக குறைந்துவிட்டது.
நேற்று முன்தின நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 289 மில்லியன் கன அடியாகவும், 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 94 மில்லியன் கன அடியாகவும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் இருப்பு 1,813 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 667 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
மக்கள்தொகை 80 லட்சத்தை தாண்டிவிட்ட சென்னை மாநகராட் சிப் பகுதிகளுக்கு, நாள் ஒன்றுக்கு 900 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில், சென்னை குடிநீர் வாரியம் தற்போது 580 மில்லியன் லிட்டர் மட்டுமே குடிநீர் விநியோகித்து வருகிறது. அதுவும், சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதி களுக்கும் தினமும் குடிநீர் விநியோகிக்காமல், ஒரு நாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் குறிப்பிட்ட பகுதிகளாகப் பிரித்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையின் நீராதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்து வருவதால், வரும் கோடை காலத்தில் சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
குறையும் நிலத்தடி நீர்மட்டம்
இதுமட்டுமன்றி, 2011-ம் ஆண்டு வரை 4 மீ. முதல் 4.9 மீ. வரை இருந்த சென்னையின் சராசரி நிலத்தடி நீர்மட்டம், சிமென்ட் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2014 இறுதியில் 5.75 மீ.-க்குச் சென்று விட்டது. எனவே, குடிநீர்த் தட்டுப் பாடு அதிகரிக்கவே வாய்ப்பிருப்ப தாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
சென்னையின் குடிநீர்த் தேவையை பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் நிறைவு செய்து வருகின்றன. தற்போது, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 367 கன அடி வீதம் வரும் கிருஷ்ணா நதி நீர் தவிர வீராணம் ஏரியிலிருந்தும் விநாடிக்கு 74 கன அடி வீதம் நீர், சென்னையின் குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், மீஞ்சூர் மற்றும் நெம் மேலியில் உள்ள கடல் நீரை குடி நீராக்கும் நிலையங்களில் இருந்து தினமும் வரும் 200 மில்லியன் லிட்டர் குடிநீரும் சென்னையின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சென்னையில் தற்போது குடிநீர்த் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை.
வரும் கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுமா என்பது, மார்ச் மாதத்துக்குப் பிறகு நீர்நிலைகளில் உள்ள நீர் இருப்பைப் பொறுத்தே தெரிய வரும். ஆனால், எப்படி இருந்தாலும் சூழலுக்கேற்ப சென்னை குடிநீர் வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT