Last Updated : 03 Feb, 2015 10:26 AM

 

Published : 03 Feb 2015 10:26 AM
Last Updated : 03 Feb 2015 10:26 AM

வீடு கட்ட கடன் பெறும்போதே சூரியசக்தி மின்னுற்பத்தி கருவிகளை அமைக்கவும் கடனுதவி: பொதுத்துறை வங்கிகள் அறிமுகம்

வீடு கட்ட கடன் பெறும்போதே, சூரிய சக்தி மின்னுற்பத்தி கருவிகளை அமைப்பதற்கும் கடன் வழங்க பொதுத் துறை வங்கிகள் முன்வந்துள்ளன.

தற்போது முதற்கட்டமாக 8 பொதுத் துறை வங்கிகளில் இதற்கான கடன்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மின்தட்டுப்பாட்டைப் போக்க மத்திய, மாநில அரசுகள் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மின்னுற்பத்தி திட்டங்களுக்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வரும் நிலையி லும், மின்னுற்பத்தியில் தன்னிறைவை எட்ட முடியவில்லை.

இந்நிலையில், இயற்கையாகக் கிடைக்கும் சூரியசக்தியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தை அதிகளவில் பயன் படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக, தனி நபர்கள், தனியார் தொழிற் சாலைகள் உள்ளிட்டவை சூரிய சக்தி மின்சாரத்தைத் தயாரிக்க முன்வந்தால், அவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

தற்போது, இத்திட்டத்துக்கு உதவிக் கரம் நீட்ட வங்கிகளும் முன்வந்துள் ளன. பொதுத்துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கும்போது, வீட்டில் ‘சோலார் பேனல்’கள் அமைக்கவும் இனி கடனுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

முதற்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய 8 வங்கிகள் இந்தக் கடனுதவியை வழங்க முன்வந்துள்ளன.

இதுகுறித்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மத்திய நிதியமைச்சகம் அளித்த பரிந் துரையை ஏற்று, சூரிய மின்சக்தி தயாரிக்க உதவும் சோலார் பேனல் களை வீட்டின் மேற்கூரையில் அமைக்க கடனுதவி வழங்க தீர்மானித்துள்ளோம். புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் வீட்டைச் சீரமைக்க கடன் பெறுபவர்கள் கூடவே சேர்த்து சோலார் பேனல்கள் அமைக்க கடனுதவி பெறலாம்.இதுகுறித்து, வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தி வருகிறோம்.

இதற்காக, குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குகிறோம். ஏற்கெனவே, வீட்டுக் கடன் பெற்றவர்களும் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை அமைக்க விரும்பினால், நாங்கள் அதற்காக கடன் வழங்கத் தயாராக உள்ளோம். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமே இதற்கும் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x